நடிகர் சந்தானம் நடித்துள்ள “வடக்குப்பட்டி ராமசாமி” (Vadakkupatti Ramasamy) படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் சந்தானம். இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவர், மீண்டும் காமெடி கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்படியான நிலையில் கடந்தாண்டு சந்தானம் நடிப்பில் 3 படங்கள் வெளியானது. இதில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் மட்டும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மற்றப் படங்களான கிக், 80ஸ் பில்டப் ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது. 


இதனிடையே 2022 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் ‘டிக்கிலோனா’ படம் வெளியானது. 3 வேடத்தில் நடித்த இப்படம் ரசிகர்களை கவர்ந்தது. கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கிய நிலையில் அவருடன் மீண்டும் சந்தானம் கூட்டணி வைத்துள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரித்துள்ள இந்த படத்துக்கு “வடக்குப்பட்டி ராமசாமி” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் மேகா ஆகாஷ்  ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் இயக்குநர் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின்  என பலரும் நடித்துள்ளனர். 






ஷான் ரோல்டன் வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கு இசையமைக்கும் நிலையில், 'விட்னஸ்’ திரைப்பட இயக்குநர் தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், படத்தொகுப்பை சிவ நந்தீஸ்வரனும், கலை இயக்குநராக ராஜேஷூம் பணியாற்றுகிறார்கள். வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் கைப்பற்றியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில் அடுத்தடுத்து சந்தானம் படங்கள் வெளியாகி கொண்டே இருந்ததால் பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பிப்ரவரி 2 ஆம்  தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, ‘அண்ணாத்த’ படத்தின் ரஜினிகாந்த் கெட்டப்பில் சந்தானம் இருக்கும் புகைப்படம் அடங்கிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. 




மேலும் படிக்க: Vadivelu: விரைவில் சம்பவம் .. "கலைஞர் 100” விழாவில் வடிவேலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய பார்த்திபன்..!