நடிகர் விஜயின் நெருங்கிய நண்பராக அறியப்படும் நடிகர் சஞ்சீவ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் விஜயின் போட்டியாளராகக் கருதப்படும் நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார். மேலும் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றையும் கூறியுள்ளார் நடிகர் சஞ்சீவ். அந்த நேர்காணலில் இருந்து சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம்.
நடிகர் அஜித் பற்றிய பேசிய நடிகர் சஞ்சீவ், `அஜித் சார்.. தல.. பெயருக்கு ஏற்றது போல அவர் `தல’ தான்.. ரொம்ப தைரியமான நபர்.. அவருக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை. எதைப் பற்றியும் கவலையும் இல்லை. நான் யாரோ என்றால் நான் யாரோ தான் என்று நினைக்க கூடியவர்.. `இன்னைக்கு என் சாப்பாட்டில் என் பெயர் எழுதியிருந்தால் அது எனக்குத் தான் கிடைக்கும்.. தலைகீழாக நின்றாலும் அது உனக்கு கிடைக்காது’ என்று நினைக்கக்கூடியவர் அவர். ஒரு வேளை அது வேறு யாருக்காவது போய் விடுமோ என்ற பயம் அவருக்குக் கிடையாது.. `நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். எனக்கு கிடைக்கப் போவது எனக்குத் தான் கிடைக்கும்’ என்ற ரீதியில் தனது எதிர்ப்புகளை அணுகுபவர். என்னைப் பொருத்த வரையில், இந்த ஒரு குணத்தைக் கொண்டிருப்பதால் தான் `தல’ எப்போதும் `தல’ ஆகவே இருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், `அவருக்கு எந்தப் பின்னணியும் இல்லை. தானாக எதுவுமே இல்லாமல் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். அவருக்கு உதவி என்று கை கொடுத்து தூக்கிவிட யாரும் இல்லை. இது எல்லாருக்கும் தெரிந்தது தான். `என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினது’ என அவர் சொல்லும் வசனம் அவருக்கு நன்றாகவே பொருந்தும். அவருடைய அந்த தைரியம் மிகவும் பிடிக்கும். ஒருமுறை என்னையும், எனது நண்பர் ஸ்ரீநாத்தும் அவரைச் சந்தித்தோம். ஸ்ரீநாத்தின் கதை சொல்வதற்காகவா, எதற்கு சென்றோம் என்பது நினைவில் இல்லை. அப்போது நானும் கூட சென்றேன். கேரவனில் உட்கார வைத்து, ட்ராபிகானா ஜூஸ் கொடுத்து உபசரித்தார்கள். இது நடந்து ரொம்ப காலம் ஆகவில்லை. இது சுமார் 10 முதல் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. நானும் ஸ்ரீநாத்தும் விஜயின் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது விஜய், அஜித் ஆகிய இருவருக்கும் திரைப்படங்கள் வெளியீடு என்பது மிகக் கடினமான போட்டியாக நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அவர்கள் இருவரும் ஜாலியாக இருக்கிறார்கள்.. ஆனால் படங்கள் மிகுந்த போட்டியாக போய்க் கொண்டிருந்தன’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், `நாங்கள் இருவரும் விஜயின் நெருங்கிய நண்பர்கள் என்பது அவருக்கும் தெரியும்.. ட்ராபிகானா ஜூஸ் கொடுத்து உபசரித்து, அதனைக் குடிக்கும் போது அஜித் எங்களிடம், `உங்கள் நண்பரை நான் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும்’ என்றார். மேலும், `உங்கள் நண்பரைத் தாண்டி நான் செல்வேன்’ எனவும் கூறினார். நாங்கள் இருவரும் சிரித்தோம். அதை விஜயிடம் சொன்ன போது, அவரும் சிரித்தார். `சூப்பர்ல.. இதை சொல்றதும் பெரிய விஷயம் தான்டா’ என்று சொன்னார் விஜய். இருவரிடமும் நல்ல குணங்கள் எத்தனையோ இருக்கின்றன.. ஆனாலும் தல `தல’ தான்.. தளபதி `தளபதி’ தான்’ என்று கூறி முடித்துக் கொண்டார்.