நடிகர் சமுத்திரகனி நடிக்கும் விமானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்து நடிகரானவர்களில் சம காலங்களில் மிக முக்கியமானவர் சமுத்திரகனி. அவர் இல்லாத படங்களே இல்லை, ஏற்காத கேரக்டர்களே இல்லை என்னும் அளவுக்கு எந்த கேரக்டரை கொடுத்தாலும் சிறப்பாக செய்து ரசிகர்களின் பாராட்டைப் பெறுவார். அந்த வகையில் தற்போது  ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும்  'விமானம்' எனும் படத்தில் நடித்துள்ளார். 


அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாகவும், கதையின் நாயகனாகவும் அவர் நடித்துள்ளார். விமானம் படம் ஜூன் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விமானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ப்ரோமோ வீடியோவுடன் வெளியாகியுள்ளது. 


'விமானம்' தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.  இந்த படத்தை சிவ பிரசாத் யானலா எழுதி இயக்கியிருக்கிறார். இதில் சமுத்திரக்கனியுடன் மாஸ்டர் துருவன்,அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மின், 'நான் கடவுள்' ராஜேந்திரன்,  ராகுல், ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள். விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்திருக்கிறார்.



மார்தன் கே. வெங்கடேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, பாடலாசிரியர் சினேகன் பாடல்களை எழுதியிருக்கிறார்.  விமானம் படம்  தொடர்பாக ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய திரைப்படங்களுக்கான தலைவர் திரு அக்ஷய் கெஜ்ரிவால் தெரிவிக்கையில், '' கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து 'விமானம்' படத்திற்காக பணியாற்றுவதில் நாங்கள் மிகவும் பெருமிதம் அடைகிறோம்.  வலுவான கதைக்களம் திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன்  விமானத்தை வழங்குவது எங்கள் பாக்கியம்.


இப்படத்தின் மூலம் பார்வையாளர்கள் உணர்வுபூர்வமான பயணத்திற்கு தயாராவார்கள். ஜீ ஸ்டுடியோஸ் மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் உள்ளடக்கத்தை தொடர்ந்து உருவாக்கி வழங்குவதே எங்களது நோக்கம். இந்த 'விமானம்' திரைப்படம், அந்த திசையில் ஒரு நேர்நிலையான முன்னேற்றத்தின் ஒரு படியாக அமையும்” என தெரிவித்துள்ளார்.