கலைஞர் 100


மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி திரையுலகுக்கு ஆற்றிய பங்கை நினைவுகூறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ‘கலைஞர் 100’.  கடந்த ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற கலைஞர் 100 விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர்.


இவ்விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், ”சிவாஜியை ஒரே படத்தில் ஸ்டாராக்கியவர் கருணாநிதி. சாதாரணமாக இருந்த எம்ஜிஆரை பெரிய வெற்றிப் படங்கள் கொடுக்க வைத்தவர், கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவில் இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆர்களை உருவாக்கி இருக்கலாம்” எனப் பேசியிருந்தார். 


பராசக்தி


மேலும் கலைஞர் கருணாநிதியின் திரைப்பணியைப் போற்றும் வகையில் பல்வேறு சிறு நிகழ்ச்சிகளும் இந்த விழாவில் அரங்கேற்றப்பட்டன. இதில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் கலைஞர் எழுதி மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்திய பராசக்தி படத்தின் இறுதிக் காட்சிகள் மேடையில் மீண்டும் அரங்கேற்றப் பட்டன. பராசக்தி படத்தின் இறுதிக் காட்சியில் நடிகர் சிவாஜி கணேசன் குற்றவாளிக் கூண்டில் நின்று அற்புதமாகப் பேசும் காட்சியின் தாக்கம் இன்று வரை பல்வேறு தமிழ் சினிமாக்களில் தொடர்ந்து வருகிறது. மேலும் சிவாஜி கணேசன் இந்தக் காட்சியில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள், வசன உச்சரிப்புகள் மக்கள் மத்தியில் மிக ஆழமாக சென்று பதிந்தன. 


 வெளுத்து வாங்கிய எஸ்.ஜே சூர்யா






கலைஞர் 100 நிகழ்ச்சியில் இந்தக் காட்சியில் நடிகர் எஸ்.ஜே சூர்யா சிவாஜி கணேசனாக நடித்துள்ளார். சிவாஜி கணேசன் பேசும் வசனங்களை அப்படியே வரிசை மாறாமல் எஸ்.ஜே சூர்யா பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


சமீப காலங்களில் தனது மாறுபட்ட நடிப்பு மற்றும் டயலாக் டெலிவரிக்காக அதிகம் பாராட்டப்படுபவர் எஸ்.ஜே சூரியா. இந்த வீடியோவில் அவர் வெறும் மேடைக்காக இல்லாமல் பராசக்தி படத்தை இப்போது எடுத்தால் எந்த மாதிரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாரோ அதே மாதிரி நடித்துள்ளார். கமல்ஹாசன் , ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய நடிகர்கள் அமர்ந்திருந்த இந்த விழாவில் எஸ்.ஜே.சூர்யா தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 


எஸ்.ஜே சூர்யா நடித்து வரும் படங்கள்


சமீபத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்து வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா இணைந்து நடிக்கும் எல்.ஐ.சி (எ) லவ் இன்ஸூரன்ஸ் கார்பரேஷன் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர்த்து கெளதம் மேனன் இயக்க இருக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.