அந்தப்பதிவில், “ 2021 ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு ரயிலில் சென்னையிலிருந்து சாத்தூர் புறப்பட்டேன். ரயில்பயணம் என்றதும் எப்பவும்போல உற்சாகம். பயணங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ரயில் பயணம். கட்டு சோறுடன் கண்டிப்பாக வாழைப்பழம் வேண்டும். திடீரென்று இரவில் பசித்தால் பழம்தான் சிறந்தது என்பது என் அப்பாவின் அறிவுருத்தல்.



 

 

நமக்கு எப்பவுமே பசிக்கும் என்பது வேறு கதை. டிக்கெட் தணிக்கையாளர் ஆதார் அட்டையை வாங்கிப்பார்க்காமல் ‘ உங்க பர்த் எண் என்ன, பெயரென்ன’ என்று மட்டும் கேட்டார். கோவிட் காலத்தின் மாற்றம். நான் என் விவரங்களை சொன்னேன்.என் எதிர் இருக்கையில் இருந்த பெண் ‘ நான் டாக்டர் புஷ்பா’ என்றார், நான் ஆக்டர் ரோகிணி என்று சொல்லியிருக்கணுமோ ?டாக்டர் புஷ்பா பார்க்க ஓவியர் ரோகிணி மாதிரி இருந்தார்.

 

அவர்களைப்பார்த்தவுடன் என்னை அறியாமல் சிறு புன்னகை பூத்துவிட்டது. பிறகு சுதாரித்துக்கொண்டும் ஒரு உலர்ந்த புன்னகைக்கு முகத்தை மாற்றி, அறியாமை பாலித்தேன். ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள் போல் இருப்பது மனிதர்கள் தான் என்று நினைக்கிறேன். வேறு உயிரினங்கள் இயற்கையாக பரஸ்பர அறிதல் கொண்டாடுவதுபோல் நாம் இல்லாததற்கு நமது அச்சங்கள் என்ன என்று யோசிக்கவைத்தது. என் புன்னகையை டாக்டர் புஷ்பா ஏற்காததற்கு என் மாஸ்க்கும் காரணம் என்று பிறகு புரிந்தது. அதனால் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. அதிகாலை 5 மணிக்கு சாத்தூரில் 2 நிமிடம்தான் நிற்கும், விழிப்புடன் இருக்கவேண்டும் என்று தமிழ்செல்வன் தோழர் சொன்னதும் பதட்டத்திலேயே உறங்க முயற்சித்தேன்.

 

ஒரு நாளில் அதிகாலை தான் மிகவும் ஈர்ப்புடையது.

 

இருந்தும் மூன்று முறை அலைபேசியில் அழைத்தும் நான் எழவில்லை என்பது எவ்வளவு விழிப்புடன் இருந்தேன் என்பதைத் தெளிவாக்கும்.ஒரு வழியாக கடைசி நிமிடத்தில் முழித்து பெட்டியுடன் அரக்கப்பறக்க இறங்கினதும் தான் தோழர்கள் நிம்மதியானார்கள். ஒரு நாளில் அதிகாலை தான் மிகவும் ஈர்ப்புடையது. அதை நான் தூங்கியே தவறவிடும் நாட்களை எண்ணவைத்தது அன்றைய பொழுதும். தங்குமிடம் சேர்ந்து, அறைக்குள் உட்கார்ந்து ஆதவனும் களப்பிரன் தோழருடனும் பேசிக்கொண்டிருக்கும்பொழுது தான் என் காலணிகளை பார்த்தேன்…இரு வேறு காலணிகள்.

 

அவசரத்தில் மாறிய காலணி 

 

அவசரத்தில் டாக்டர் புஷ்பா காலணி ஒன்றை ஆக்டர் ரோகிணி போட்டுக்கொண்டு வந்துவிட்டாள். அவர் என்னை வசைபாடியிருப்பாரா அல்லது ரசித்திருப்பாரா என்று அவரது உலகத்தில் என் மனம் அலைந்துப்பார்த்தது. அந்த நிமிடம் டாக்டர் புஷ்பா என் உறவினர் ஆகிவிட்டார். முதலில் உரக்க சிரித்து பின்பு ஆதவன் தோழர் தனது முதல் காலணி தொலைந்த கதை சொன்னார். ஒரு குறும்படத்துக்கான அழகியல் உள்ள சம்பவம் அது. அதை அவரே சொல்லட்டும்.



 

இப்போது இந்த இரு வேறு காலணியை என்ன செய்வது? எனக்காக காலணிகளை நான் தீர்மானித்து வாங்கலாம் என்கிற நிலை வந்ததும், விலையைப்பற்றி கவலைக்கொள்ளாமல் பிடித்த காலணி வாங்குவதுதான் வசதி எனும் தோணல் எனக்கு. அந்த நிலை அடைந்ததும் ஜெஜெ அளவு இல்லையென்றாலும் தேவைக்கு அதிகமாகத்தான் காலணிகள் வைத்திருப்பேன். அதனால் சாத்தூரில் புதிய காலணி வாங்கவில்லை.

 

அந்த இரு வேறு காலணி ஜோடியை அணிந்தேதான் உள்ளுக்குள் ஒருவித புன்னகையுடன் அன்று முழுவதும் நடந்தேன். இப்படி ஒரு நாள் எதேச்சையாக சுவாரசியமாவது எத்தனை அழகானது. என்றேனும் நாம் சந்திக்கும் வேளை வருமானால் நாம் கொஞ்சம் அன்பும், காலணியும் பரிமாரிக்கொள்ளலாம் புஷ்பா… அதுவரை நீங்களும் அதை பத்திரமாக வைத்திருந்தீர்களேயானால்." என்று பதிவிட்டு இருக்கிறார். 

 

யார் இந்த ரோகிணி?

 

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு  அறிமுகமான நடிகை ரோகிணி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்புக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ள அவர், சின்னத்திரையிலும் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டும் பிரபல வில்லனாக வலம்வந்த  ரகுவரனை திருமணம் செய்து கொண்டார். இந்தத்தம்பதிக்கு ஒரு மகனும் பிறந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு  சர்க்கரை நோய் காரணமாக உயிரிழந்தார்.