விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ ஷங்கர். மிமிக்ரி, ஸ்டாண்ட் அப் காமெடி என பன்முகத் திறமைக்கொண்ட இவர், சில வருடங்களுக்கு முன்னர் திரையுலகிற்குள் அறிமுகமானார். முதலில் டிவி பிரபலமாக இருந்த இவர், தற்போது திரையுலக பிரபலங்களுள் ஒருவராக மாறிவிட்டார்.


விஜய்,அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு, விஷால்  உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர் இப்போது குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். 






இவர் மட்டுமன்றி, இவரது மகள் மற்றும் மனைவியும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களாக உள்ளனர். ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில்  பங்கேற்று வருகிறார். இவரது மகள், இந்திரஜாவும் விஜய்யுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து விருமன் படத்திலும் நடித்திருந்தார். இது மட்டுமன்றி நடனத்தை ஃபேவரைட் ஹாபியாக கொண்டுள்ள இந்திரஜா, அடிக்கடி நடனமாடி ரீல்ஸ்களையும் வெளியிடுவார். 




சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி:


 தனது 22ஆவது திருமண நாளைக் கொண்டாடிய ரோபோ சங்கர் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்தை தன் குடும்பத்துட சென்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அதுமட்டுமன்றி ரோபோ சங்கரின் குடும்பத்தினர் ரஜினியுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டனர். இந்த போட்டோக்கள் தற்போது இணையவாசிகளிடையே வைரலாகி வருகின்றது. 






ரோபோ-பிரியங்காவின் மாறாத காதல்:


நடிகர் ரோபோ சங்கர், விஜய் டிவியில் பங்கேற்பாளராகவும் செலிப்ரிட்டியாகவும் இருந்த காலத்திலிருந்தே, அவரது மனைவி குறித்து பல நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார். ரோபோ சங்கரும், அவரது மனைவி பிரியங்காவும் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர். குறிப்பாக ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சியில் இந்த ஜோடி பங்கேற்ற போது கூட, வீட்டில் நிகழும் சின்ன சின்ன சண்டைகளையும், நிகழ்வுகளையும் ரோபாே சங்கர் வேடிக்கையாக சொன்ன விதம் பலரையும் கவர்ந்தது.


குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்பாளராக இருந்த பிரியங்காவும், ரோபா சங்கர் குறித்து அடிக்கடி கேமராவில் கூறுவார். காலங்கள் பல கடந்தாலும், இன்றும் மாறாத இவர்களது காதல் பலரையும் ரசிக்க வைத்துள்ளது.