நிகழ்ச்சி ஒன்றில் மலையாள இயக்குநர் பிஜூ தாமோதரன், ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டைப் பற்றிய ஒரு கருத்தை வெளிப்படுத்த அதற்கு இயக்குநர் ரஞ்சித் உட்பட பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி சிரித்தது ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த காணொளி தற்போது வைரலாகி வரும் நிலையில் ரஜினி ரசிகர்கள் இயக்குநர் ரஞ்சித்தை வசைபாட தொடங்கி இருக்கிறார்கள். உண்மையில் ரஜினி கேலி செய்யப்பட்டாரா? ரஜினியைப் பற்றிய அந்த கருத்து எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதைப் பார்க்கலாம்
தலித் வரலாற்று மாதம்
டாக்டர் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதம் தலித் வரலாற்று மாதமாக நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தலித் திரைப்பட விழாக்கள், இலக்கிய விழா என பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் இந்த மாதம் இயக்குநர் ரஞ்சித் தலைமையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 8 முதல் 10-ஆம் தேதி வரை தலித் திரைப்படங்களை கொண்டாடும் வகையில் பி.கே ரோஸி பெயரில் திரைப்படம் விழா நடைபெற்றது.
தமிழ் , மலையாள, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்து திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன. மேலும் பல்வேறு தலித் இயக்குநர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தலித் சினிமா குறித்த விவாதங்களில் பங்கேற்றார்கள்.
அந்த வகையில், கடந்த 10-ஆம் தேதி இயக்குநர் பா ரஞ்சித் மலையாள இயக்குநர் பிஜூ தாமோதரன் மற்றும் ப்ளூ ஸ்டார் படத்தின் இயக்குநர் ஜெயகுமார் விவாதத்தில் கலந்துகொண்டார்கள்.
தலித் கலாச்சாரத்தை அடையாளப்படுத்த வேண்டிய அவசியம்
பிற சாதியினரின் பிரச்சனைகளைக் காட்டிலும், தலித் மக்களின் பிரச்சனைகள் தனியான கவனமும் பெறவேண்டிய அவசியத்தை பற்றி விரிவாக பேசினார்.
மேலும் திரைப்படங்களில் தலித் வாழ்க்கை இதுவரை சித்தரிக்கப்பட்ட விதம் குறித்தும், தலித் மக்களின் கதைகளை திரைப்படமாக்குவதில் இருக்கும் சவால்களைப் பற்றியும், பேசினார். இந்த சவால்களை எதிர்கொண்டு தொடர்ச்சியாக தன்னை இயக்கும் சக்தியாக புரட்சியாளர் அம்பேத்கரின் வாழ்க்கையும், அவருடைய எழுத்துக்களும் தனக்கு உந்துதலாக இருப்பதாக தெரிவித்தார்.
ரஜினியை அவமானப்படுத்தினாரா ரஞ்சித் ?
”கேரளத்தில் திரைப்படத் துறையில் தலித் இயக்கம் பரவலாவதில் இருக்கும் சிக்கல்களைப் பற்றியும் எதார்த்தத்தில் இருக்கும் சவால்களைப் பற்றியும் பேசினார். அப்போது அவர், தமிழ் வெகுஜனப் படங்களில் பெரிய ஸ்டார்கள் ரஞ்சித் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிப்பதை குறிப்பிட்டு சொன்னார். ரஞ்சித் இயக்கிய காலா படத்தில், ரஜினிகாந்த் போன்ற ஒரு ஸ்டார் நடித்ததை அவர் பாராட்டும்விதமாக குறிப்பிட்டார். ஆனால் ரஞ்சித்தின் அரசியல் ரஜினிகாந்துக்கு தெரியுமா? என்பது சந்தேகம்தான்” என்று பிஜூ பேசினார். இதனைத் தொடர்ந்து பார்வையாளர்களும் இயக்குநர் ரஞ்சித்தும் மேடையில் சிரித்தது ரஜினி ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.
இயக்குநர் ரஞ்சித் ரஜினியை தன் படங்களில் நடிக்க வைப்பதற்கு முன் ஒரு ஆளாகவும், இப்போது வேறு ஒரு ஆளாகவும் நடந்துகொள்வதாக ரஜினி ரசிகர்கள் அவரை குற்றம்சாட்டிவருகிறார்கள்.