முத்து
ரஜினிகாந்த் நடித்து கே.எச் ரவிகுமார் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான படம் முத்து. இப்படத்தில் ரஜினிகாந்த் தந்தை மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார். சரத்பாபு , செந்தில் , வடிவேலு , மீனா , ராதாரவி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ரஜினி கே.எஸ் ரவிகுமார் காம்பினேஷனில் வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றிப் படம் முத்து. தமிழில் மட்டுமில்லாமல் ஜப்பானில் வெளியான முதல் தமிழ் படம் முத்து என்பது குறிப்பிடத் தக்கது. இப்படத்திற்காக ரஜினிகாந்திற்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் மாநில விருது கிடைத்தது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த தேன்மாவின் கொம்பது படத்தின் கதையை ரஜினிகாந்தின் ஸ்டார் இமேஜூக்கு ஏற்ப ரீமேக் செய்ததாக இயக்குநர் கே.எஸ் ரவிகுமார் தெரிவித்துள்ளார். மலையாளத்தைக் காட்டிலும் தமிழில் ரஜினியின் ஸ்டைல் , காமெடி , ஆக்ஷன் , செண்டிமண்ட் , ரொமான்ஸ் என கே.எஸ் ரவிகுமாரின் திரைக்கதை , ஏ.ஆர் ரஹ்மானின் இசை என திரையரங்கில் கொண்டாட்ட விருந்தாக அமைந்தது முத்து படம்.
முத்து படத்தைப் பற்றி ரமேஷ் கண்ணா பகிர்ந்த தகவல்
கே.எஸ் ரவிகுமார் படம் என்றால் அதில் நடிகர் ரமேஷ் கண்ணாவின் பங்கு இல்லாமல் இருக்காது. ரவிகுமாரின் உதவி இயக்குநரான ரமேஷ் கண்ணா ரவிகுமார் படங்களை கமர்ஷியலாக மெருகேற்றுவதில் நிறைய பங்காற்றி இருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் முத்து படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் ரமேஷ் கண்ணா. முத்து படத்தில் சரத்பாபுவின் முறை பெண்ணாக வந்த பத்மினியாக சுபஸ்ரீ நடித்திருந்தார். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை ஊர்வசியை நடிக்க வைக்கலாம் என்று ரமேஷ் கண்ணா மற்றும் கே.எஸ் ரவிகுமார் முடிவு செய்திருந்ததாகவும் ஆனால் ரஜினி அதற்கு எதிராக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முத்து படத்தில் ஊர்வசி நடிக்க கூடாது என்று சொன்ன ரஜினி
பத்மினி கதாபாத்திரத்தில் குறும்புத் தனமான இயல்பிற்கு ஊர்வசி பொறுத்தமாக இருப்பார் என்று செட்டில் இருந்த அனைவரிடமும் சொல்லி ஒப்புதல் வாங்கியிருக்கிறார் ரமேஷ் கண்ணா. ஆனால் ரஜினி இந்தப் படத்தில் அவர் நடிக்க கூடாது என்று ரஜினி உறுதியாக இருந்திருக்கிறார். ஊர்வசி இப்போது தான் வளர்ந்து வருகிறார். இந்த மாதிரியான நேரத்தில் அவருக்கு இவ்வளவு சின்ன கதாபாத்திரம் கொடுப்பது என்பது அவரது கரியரை பாதிக்கும் என்று ரஜினி கூறியிருக்கிறார். இதை அவரே ஊர்வசிக்கும் ஃபோன் செய்து அவருக்கு சொல்லி புரிய வைத்திருக்கிறார் ரஜினி. ரமேஷ் கண்ணா பேசியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.