வெங்கட் பிரபு படத்தில் நடிக்க கூப்பிட்ட நிலையில் அப்படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது நல்லவேளை நான் நடிக்கவில்லை என நினைத்ததாக நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் தற்போதுள்ள முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, விஜய்யை வைத்து ‘the greatest of all time’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் “பார்ட்டி” என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜெய், சிவா, சத்யராஜ், ஜெயராம், ஷாம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா, நிவேதா பெத்துராஜ், நாசர், சந்திரன், சுரேஷ் என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். பிரேம்ஜி அமரன் இசையமைத்த இப்படம் இதுவரை வெளியாகவில்லை. முழுக்க முழுக்க பிஜி தீவில் படமாக்கப்பட்ட பார்ட்டி படத்தின் ப்ரோமோக்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  


இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வெங்கட் பிரபு முதலில் நடிகர் ராமராஜனை அணுகியுள்ளார். இதுபற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய ராமராஜன், “என் உடன்பிறவா சகோதரனான கங்கை அமரன் மகன் என்பதால் ஆர்வமாக கதை கேட்டேன். அந்த கதையும் எனக்கு பிடிக்கல. இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். இலங்கையிலும் நடக்கும் என சொன்னார். நான் என்னால் வரமுடியாது என சொல்லி விட்டேன்.


ஆனால் விளம்பரத்தில் பார்ட்டி படத்தின் டைட்டில் மதுபான பாட்டிலில் இருப்பது போல உருவாக்கப்பட்டிருக்கும். அதனைப் பார்த்து நல்ல வேளை நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என நினைத்துக் கொண்டேன். நான் இத்தனை ஆண்டுகளாக கட்டி காத்தது எல்லாம் போய் விட்டால் மனது ரொம்ப கஷ்டமாகி விடும். ஆண்டவனா பார்த்து செய்த செயல் என நினைத்துக் கொண்டேன்” என ராமராஜன் தெரிவித்துள்ளார். 


சாமானியன் படம் 


நடிகர் ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பின் “சாமானியன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராகேஷ் இயக்கியுள்ள நிலையில் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ளார். இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், நக்ஸா சரண், அபர்ணதி, ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி என பலரும் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.