கூட்டம் கூட்டமாக மக்களை திரையரங்கை நோக்கி படையெடுக்க வைத்தவர்களில் முதன்மையான நடிகர் ராமராஜன் , ’எங்க ஊரு நல்ல ஊரு’ படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமான ராமராஜன் கிராமத்து கதைகளை மையமாக கொண்ட படங்களில் நடித்து மக்கள் நாயகன் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரர் ஆனார்.
ராமராஜன்
’எங்க ஊரு பாட்டுக்காரன்’ , ’எங்க ஊரு காவல்காரன்’ போன்ற படங்களின் வழியாக தொடர்ச்சியாக சாமானிய மக்களின் நாயகனாக நடித்தார் . ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படம் 400 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடி சாதனைப் படைத்தது. நடிகராக 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ராமராஜ், 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் இருக்கிறார்.
பல வருடங்கள் சினிமாவை விட்டு விலகியிருந்த ராமராஜன் தற்போது நடித்துள்ள படம் சாமானியன். ராகேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ராமராஜன் , ராதா ரவி , மைம் கோபி , எம்.எஸ் பாஸ்கர், வெங்கட், கே.எஸ் ரவிகுமார் , அறந்தாங்கி நிஷா , தீபா ஷங்கர் , சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பல வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் ஊடக கவனம் அவர் பக்கம் திரும்பியுள்ளது. பல்வேறு திரைப்பட அனுபவங்களை நேர்காணல்களில் பகிர்ந்து வரும் ராமராஜ் தான் நிராகரித்த படங்கள் பற்றியும் அதன் பின் இருக்கும் காரணம் பற்றியும் வெளிப்படையாக பேசி வருகிறார்.
எல்.கே.ஜி. படத்தில் நடிக்காததற்கு காரணம் இதுதான்
ஆர்.ஜே பாலாஜி நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் எல்.கே.ஜி. சமகால அரசியல் சூழலை பகடி செய்யும் வகையில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தில் வில்லனாக ஜே.கே ரிதீஷ் நடித்திருந்தார். உடை , நடை , போட்டிருக்கும் சட்டை என அவரது கதாபாத்திரம் நடிகர் ராமராஜனின் சாயலில் அமைந்திருந்தது. ஆனால் உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆர்.ஜே பாலாஜி தன்னை கேட்டதாக நடிகர் ராமராஜன் தற்போது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “ எல்.கே.ஜி படத்தில் நான் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்னுடைய கதாபாத்திரத்திற்கு முதல் காட்சியே இடைவேளையில் தான் . நான் இத்தனை வருடம் சேர்த்து வைத்தது எல்லாமே இதில் போய்விடும் என்பதால் நான் இப்படத்தில் நடிக்க நிராகரித்துவிட்டேன். அதேபோல் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான பார்ட்டி படத்திலும் நடிக்க நிராகர்த்துவிட்டேன். அந்த படம் வெளியான போதுதான் நல்லவேளை நான் அதில் நடிக்கவில்லை என்று நினைத்திக் கொண்டேன்.” என்று ராமராஜன் கூறியுள்ளார்.