சாமானியன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராமராஜன் பேசிய கருத்துகள் தமிழ் சினிமாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராமராஜன், தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன், என்னை பெத்த ராசா உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் நாயகனாக கொண்டாடப்பட்டார். கடைசியாக 2012 ஆம் ஆண்டு மேதை என்ற படத்தில் நடித்த அவர் அதன்பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். ஆனாலும் அவர் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ராமராஜன் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார். சாமானியன் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை ட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ளார். ராஹேஷ் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் இப்படத்தில் நடிகர்கள் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த 3 சாமானியர்களும் சமூகத்துக்கு என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ராமராஜன், “ இதுவரை எத்தனையோ கதைகளை கேட்டுவிட்டேன். ஆனால் எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. ரூபாய் 100 கோடி கொடுத்தாலும் தாறுமாறான கதைகளில் நடிக்கும் அளவில் நான் தரம்கெட்ட வர்க்கத்தில் பிறக்கவில்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வழி வந்தவன். இதுவரை 45வது படங்களில் நடித்துள்ளேன். 50வது படம் வரை ஹீரோவாக நடித்து விட வேண்டும். இதுவரை சினிமா வரலாற்றில் 50 படங்களில் ஹீரோவாக மட்டுமே யாரும் நடித்ததில்லை.
நான் உறுதியாக சொல்கிறேன். சாமானியன் படத்தின் இடைவேளை காட்சி மாதிரி எந்த படத்திலும் வந்திருக்காது. மேலும் 50 படங்களில் நடித்து விட்டு ஒதுங்கி விடலாம் என நினைத்தேன். 12 ஆண்டுகளுக்கு முன் விபத்து ஒன்றினால் நடிக்க முடியாமல் போனது. அப்போது மேதை படம் 44வதாக வெளியாகியிருந்தது. இந்த 45வது படம் உருவாக 10 ஆண்டுகள் ஆகிவிட்டது” என ராமராஜன் தெரிவித்துள்ளார்.