சினிமாவில் நடிப்பது ரியாலிட்டி ஷோக்களை ஒப்பிடும்போது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான் என்று கூறியிருக்கிறார் நடிகர் ராமர்.
நடிகர் ராமர் தனது திரை அனுபவங்களை யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
நான் முதன்முதலில் 2007ல் தான் சேனலில் என்ட்ரி ஆனேன். விஜய் டிவி கலக்கப் போவது யாரு சீசன் 3க்காக மதுரையில் ஒரு ஆடிஷன் செய்தனர். அதில், நான், சிவகார்த்திகேயன் எல்லோரும் கலந்து கொண்டோம். சுமார் 7000 பேர் பங்கேற்றிருந்தனர். அதில் மொத்தல் 12 பேரை தான் செலக்ட் செய்தார்கள். அதில் நான், சிவகார்த்திகேயன் இருந்தோம். அப்படித்தான் என் வாய்ப்பு அமைந்தது.
சேனலில் நிறைய ரியாலிட்டி ஷோவில் தடம் பதித்து ரசிகர்களைப் பெற்றதால் தான் சினிமாவில் நடிக்க முடிந்தது.
சேனலில் நாம் ஒன் மோர் டேக் எல்லாம் போக முடியாது. ரியாலிட்டி ஷோக்களில் நிலைமைக்கு ஏற்றவாறு நாம் இம்ப்ரொவைஷ் செய்ய வேண்டும். சினிமாவில் அப்படியல்ல எழுதிக் கொடுத்த டயலாக் தான் பேச வேண்டும். ஒரு சில இயக்குநர்கள் நாம் சீனில் ஏதாவது எக்ஸ்ட்ரா செய்ய அனுமதிப்பார்கள். சிலர் படத்துக்கு இதுதான் தேவை அதை மட்டும் செய்யுங்கள் எனக் கூறிவிடுவார்கள். சினிமாவில் நடிப்பது ரியாலிட்டி ஷோக்களை ஒப்பிடும்போது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்.
நான் அண்மையில் சூர்யா சாருடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தேன். நல்ல படம். இடையே கொரோனாவால் நிறைய படங்கள் வெளியாகவில்லை, ஷூட்டிங்கும் நடக்கவில்லை. இப்போது நானும் படங்களில் நடிக்கிறேன். சூட்டிங்கும் நடக்கிறது. அடுத்தடுத்து படங்கள் வருகிறது. இயக்குநர் பாண்டிராஜ் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை அவர் ரசிப்பார். அவர் படத்தில் நடிப்பது எனது கனவாகவே இருந்தது. ஒருவழியாக அது நிறைவேறியும் விட்டது.
பொதுவாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் தற்போது புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் ரியாலிட்டி ஷோக்களை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறார்கள்.
அதில் வரும் காமெடி ஷோக்களில் ராமர் பிரபலம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா, ஆத்தாடி என்ன உடம்பு போன்ற அவர் பேசிய வசனங்கள் இன்றளவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. இதனை பல சினிமாக்களில் உபயோகித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
நடிகர் ராமரும், வடிவேல் பாலாஜியும் இணைந்து காமெடியில் விஜய் டிவியை கலக்கியிருப்பார்கள். இப்போது வடிவேல் பாலாஜி உயிருடன் இல்லை. அவரது மறைவு தனக்கு தனிப்பட்ட பேரிழப்பு என்று ராமரே கூறியிருந்தது மறக்கமுடியாதது.
ராமர் அண்மையில் விஜய் பீஸ்ட் படத்தை கலாய்த்து விஜய் டிவியில் செய்த ஷோ ஒன்று வைரலானது நினைவில் இருக்கலாம்.