உத்தர பிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், இன்று முதல் பொது மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


அயோத்தியில் கோலிவுட் பிரபலங்கள்:


அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர் கோவிலுக்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் என சுமார் 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் பல திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நடிகர்களில் நாசர், தனுஷ், எஸ்.வி. சேகர், லாரன்ஸ், நமீதா, சதீஷ், பிரசன்னா, தாமு, ஸ்ரீமன், ஸ்நேகா, பிரபு உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. 


ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழ் பிரபலங்களான இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் கங்கை அமரன், இயக்குநர்கள் பாக்கியராஜ், கே.எஸ். ரவிக்குமார், பேரரசு, ஆர்.கே. செல்வமணி, பி. வாசு ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. 


ராமர் கோயிலுக்குச் சென்ற தனுஷ்:


அதேபோல் இசையமைப்பாளர்களில் இசைஞானி இளையராஜா, தேனிசைத் தென்றல் தேவா, ஸ்ரீகாந்த் தேவா , டிரம்ஸ் சிவமணி பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 






இதில் பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் இன்று ராமர் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளார். மேலும் நடிகர் தனுஷ், தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் அவரது தந்தை சிரஞ்சீவி ஆகியோர் சென்றுள்ளனர். அந்த நேரத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட செல்ஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 






அதேபோல் நடிகர் தனுஷ் கோவிலுக்குச் செல்லும்போது பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கு அதிகமாக இருந்ததால் அவர் கோவிலுக்குச் சென்று திரும்பும்வரை காவலர்கள் பாதுகாப்பிற்கு உடன் இருந்தனர்.