போராட்டங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை. முழு உழைப்புடனும் நம்பிக்கையுடனும் போராடினால் நிச்சயம் வெற்றிப்படியை எட்ட முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக வாழ்பவர் நடிகர் ராஜ்கிரண். பொழுதுபோக்காக இருக்கும் சினிமா பலரின் வாழ்க்கைக்கு அச்சாணியாக இருந்துள்ளது. அப்படி சினிமா ஒதுக்கி தள்ளிய ஒருவரை பின்னர் புகழின் உச்சியில் அமர்த்தி அழகு பார்த்தது என்றால் அது நடிகர் ராஜ்கிரணைதான் என சொல்ல வேண்டும். சினிமாவே வாழ்க்கை என இன்றும் வாழும் இந்த கலைஞனின் 74வது பிறந்தநாள் இன்று.
ஐபிஎஸ் கனவு :
சிறு வயது முதலே ஒரு காவல் துறை அதிகாரியாக வேண்டும் அதற்காக ஐபிஎஸ் படிக்க வேண்டும் என்பதை கனவாக கொண்டு வாழ்ந்தவர். குடும்ப சூழல் காரணமாக சென்னை வந்தவர் எண்ணற்ற சிரமங்களை சந்தித்து ஏதேதோ வேலை பார்த்து பின்னர் சினிமா விநியோக நிறுவனத்தில் தினக்கூலி வேலைக்கு சேர்ந்தவர் பிற்காலத்தில் சினிமாவை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு தனியாக ஒரு சினிமா விநியோக கம்பெனியை தொடங்கினார். அங்கு தொடங்கிய அவரின் சினிமா பயணம் இன்றும் தொடர்கிறது. நிர்வாகத்தில் ஏற்பட்ட சில சறுக்கல்களால் அனைத்தையும் இழந்த ராஜ்கிரண் மீண்டும் தனது முயற்சியை தொடர்ந்தார்.
இந்த முறை விநியோகஸ்தராக அல்லாமல் தயரிப்பாளராக களம் இறங்கினார். நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான 'என்ன பெத்த ராசா' திரைப்படத்தை தயாரித்தார். அடுத்த பரிமாணமாக 'என் ராசாவின் மனசிலே' திரைப்படம் மூலம் நடிகராக அடியெடுத்து வைத்தார் ராஜ்கிரண். அவரது படங்களில் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு கருத்து இருக்கும். ஏராளமான திரைப்படங்களில் சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் அவரை கொண்டாடினர். உச்சத்தில் இருந்த ராஜ்கிரண் திடீரென சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.
நகைச்சுவையிலும் கலக்கக்கூடியவர் :
ஒரு பிரேக் எடுத்துக்கொண்ட ராஜ்கிரண் 2001ம் ஆண்டு வெளியான பாலாவின் 'நந்தா' திரைப்படத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பாண்டவர் பூமி, கோவில், சண்டக்கோழி என தொடர்ச்சியாக வெவ்வேறு கதாபாத்திரங்களில் அசத்தினார். எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதற்கு நியாயம் செய்யக்கூடிய கலைஞர் ராஜ்கிரண். ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தையும் தாண்டி காமெடி கலந்த கதாபாத்திரத்திலும் தன்னை நிரூபித்துக்காட்டினார். மிரட்டலாக நடித்தாலும் சரி சாதுவான கதாபத்திரத்தில் நடித்தாலும் சரி அவரின் நடிப்பு அபாரமே.
60 வயதில் மீண்டும் ஹீரோவான ராஜ்கிரணின் பா. பாண்டி திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. இன்றும் அவர் நடித்த படங்களும் கதாபாத்திரங்களும் பேசப்படுகிறது என்றால் அதற்கு அவர் கொடுத்த அர்ப்பணிப்பே காரணம். சிறந்த நடிகருக்கான ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். தனக்கென ஒரு கொள்கையையும் கொண்டவர். ராஜ்கிரண் இதுவரையில் எந்த ஒரு விளம்பர படத்திலும் நடித்ததில்லை. சிறந்த நடிகராக மட்டுமின்றி சிறந்த மனிதராக வாழ்ந்து வரும் ராஜ்கிரண் பிறந்தநாளான இன்று பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.