சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள். துரைமுருகன் எனது நண்பர். எங்கள் நட்பு எப்போதும் தொடரும் என்றும் பேசினார். 


துரைமுருகன் நண்பர், விஜய்க்கு வாழ்த்து:


தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியை கொடியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நடிகர் விஜய் கடந்த 22ம் தேதி அக்கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. நட்பு எப்போதுமே தொடரும் என்றும் கூறினார்.


ரஜினி பேசியது என்ன?


அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், தி.மு.க.வில் உள்ள மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை குறிப்பிட்டு, ஸ்கூல் டீச்சருக்கு நியூ ஸ்டூடண்ட்ஸ் ப்ராப்ளமே கிடையாது. பழைய ஸ்டூடண்ட்ஸ்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சாதாரண மாணவர்கள் இல்லை. அசாதாரணமானவர்கள். ஃபெயில் ஆகிவிட்டு இவர்கள் உட்கார்ந்திருக்கவில்லை. ரேங்க் வாங்கிவிட்ட பிறகும் கிளாசை விட்டுப் போக மாட்டோம் என்று உட்கார்ந்திருக்கிறார்கள். அதுவும் துரைமுருகன் என்றொரு பழைய மாணவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவர் என்று பேசினார்.  


ரஜினிகாந்தின் பேச்சு இணையத்தில் வைரலானதுடன் தி.மு.க.வில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மறைமுகமாக கூறுவது போல அமைந்தது. ரஜினிகாந்த் பேசியபோது விழா மேடையில் சிரிப்பொலி எழுந்தாலும், இந்த கருத்து தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது.


துரைமுருகன் விளக்கம்:


ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு பதிலளித்த துரைமுருகன் வயதான நடிகர்கள் தாடி வளர்ந்து, பல் விழுந்த பிறகும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமலா போய்விட்டது? என்று கேள்வி எழுப்பினார். இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்த் துரைமுருகன் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள துரைமுருகன், ரஜினிகாந்த் குறித்து நகைச்சுவையாகவே பேசினேன் என்றும், நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்ற வேண்டும். நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.


மேலும், அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு விடுத்து பின்னர் உடல்நலம் கருதி ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காத நிலை ஏற்பட்டது. இந்த சூழலில், அவரைப் போலவே தமிழில் மிகப்பெரிய நடிகராக உலா வரும் நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியதற்கு ரஜினிகாந்த் வாழ்தது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.