நடிகர் ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் பேட்டியளித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ஜெயிலர். கடந்தாண்டு தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த அண்ணாத்த படம் வெளியானது. இதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகியிருந்தது. இந்த படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே ரஜினியும் நெல்சனும் இணையும் ஜெயிலர் படத்தின் அறிவிப்பு வெளியானது.
அனிருத் இசையமைக்கவுள்ள ஜெயிலர் படத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதேபோல் தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது.
இதற்கிடையில் சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் தலைவர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளையை ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ் தொடங்கி வைத்தார். ஏழை, எளிய மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில் இந்த அறக்கட்டளையை ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சந்தானம் என்பவர் ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சத்யநாராயண ராவ், இந்த அறக்கட்டளை ஏழை மக்களுக்கு உதவி செய்யும் நல்ல எண்ணத்தில் திறக்கப்பட்டு உள்ளது என்றும், ரஜினி ஆசீர்வாதத்தில் இவை நடைபெற்று உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு இது இறைவனிடம் தான் உள்ளது என்று பதில் அளித்தார். அதேசமயம் ரஜினி ஷூட்டிங் எல்லாம் முடிந்த பிறகு ரசிகர்களை சந்திப்பார் என்றும், இந்த சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமைய வாய்ப்பு உள்ளது என்றும் சத்யநாராயண ராவ் கூறியுள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.