நடிகர் பாபி சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'ராவண கல்யாணம்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தெலுங்கு நடிகர் சந்தீப் மற்றும் பாபி சிம்ஹா இணைந்து நடிக்கும் பான் இந்திய திரைப்படம் 'ராவண கல்யாணம்'. இந்தப் படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா முன்னதாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் ஜே.வி.மது கிரண் இயக்கத்தில் தயாராகும் முதல் படைப்பு 'ராவண கல்யாணம்'. இதில் நடிகர் பாபி சிம்ஹா மற்றும் தெலுங்கின் இளம் நடிகரான சந்தீப் மாதவ் இருவருடனும் நடிகைகள் தீப்ஸிகா, புதுமுக நடிகை ரீது காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள்.
மேலும் இவர்களுடன் நடிகர் ராஜேந்திர பிரசாத், சத்ரு, ராஜ்குமார் காசி ரெட்டி, மதுசூதன், குண்டு சுதர்சன், ஆனந்த், மணி பிரபு, சரத் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சிதம் மனோகர் ஒளிப்பதி செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். பவானி பிரசாத் வசனம் எழுத, ஸ்ரீகாந்த் பட்நாயக் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
ரொமாண்டிக் மாஸ் என்டர்டெயின்மென்ட் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஹால்சியன் மூவிஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரேஷ்மி சிம்ஹா, அருண்குமார் சுராபனேனி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை பாபி சிம்ஹா மற்றும் அல்லூரி சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து வழங்குகிறார்கள்.
இந்நிலையில் முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழாவில், திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.