நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்துக்கு உலகளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது ஹீரோவாக ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத காலத்திற்கு குறைவான நாட்களே உள்ள ரிலீசுக்கு உள்ள நிலையில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிவடைந்திருந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ஜெயிலர் படத்தில் இருந்து காவாலா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 2வது பாடலாக ‘ஹூக்கும்’ பாடல் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான கிளிம்ப்ஸ் வீடியோ இன்று (ஜூலை 15) மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் நடித்துளார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்த கதையில் ‘மொய்தீன் பாய்’ என்னும் கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இதற்காக திருவண்ணாமலை சென்ற ரஜினிகாந்த், அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து அடுத்தாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார். அதற்கு நடுவில் ஓய்வு எடுக்கும் வகையில் தற்போது ரஜினி மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இலங்கை வழியாக விமானத்தில் சென்ற ரஜினிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளது. இதன் புகைப்படங்கள் அந்நிறுவனத்தில் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழில் உச்ச நடிகராக உள்ள ரஜினி இன்று இலங்கை வழியாக மாலத்தீவுக்கு சென்றார். அவரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பாக வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி, இது நல்ல நினைவுகள் எனக் குறிப்பிட்டுள்ளது. 72 வயதிலும் ஒரு பக்கம் பிஸியாக ஷூட்டிங், இன்னொரு பக்கம் சுற்றுலா என சுறுசுறுப்பான நபராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் எனர்ஜி பலரும் வியப்பாகவே உள்ளது.