விஜயகாந்த் நம்மிடையே இல்லை என்பதை இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமா ரசிகர்களால் புரட்சி கலைஞர் என அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த், தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலிலும் தனது இருப்பை பதிவு செய்தார். தன்னுடைய வாழ்நாள் எல்லாம் பிற மக்களின் துயர் துடைத்த அவருக்கு வயது வித்தியாசமில்லாத ரசிகர்கள் உள்ளனர். இப்படியான நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். 


அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தினமும் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். விஜயகாந்த் மறைந்தும் அவர் புகழ் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கிடையில் மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே கடந்த மே 9 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் இந்த விருதை விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதாவிடம் வழங்கினார். 


விஜயகாந்துக்கு விருது வழங்கியது தொடர்பாக நடிகர்கள் சத்யராஜ், பிரபு உள்ளிட்டோர் வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சியடைந்தனர். இப்படியான நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 






அதில், “வணக்கம். என்னுடைய அருமை நண்பர் அமரர் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவித்து இருக்கிறார்கள். இது நமக்கு எல்லாம் மகிழ்ச்சியான நிகழ்வாகும். இந்திய அரசின்  பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் விஜயகாந்தின் வரலாற்றை பதிவு செய்திருக்கிறார்கள். அது அவரின் பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். விஜயகாந்த் நம்மிடையே இல்லை என்பதை இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திடீரென தோன்றி, சாதனைகள் செய்து, மறைந்து விட்டார். இனிமேல் விஜயகாந்த் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது. அவரை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். மதுரையில் பிறந்த நம் மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நாமம் வாழ்க” என தெரிவித்துள்ளார்.