காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தவிர்த்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் சென்னை வடபழனியில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர்,
“நான் எந்த நிகழ்ச்சிக்கும் போறது இல்லை. அது உண்மை தான். ஏன் என கேட்டால், நான் ஒரு கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்தால் அதில் ரஜினிகாந்த் பார்ட்னர், ஷேர் இருக்கு, பினாமி பெயரில் வைத்திருக்கிறார் என சொல்லி விடுகிறார்கள். அதே மாதிரி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்பு வரும் என்பதால் இத்தனை வருடம் தவிர்த்து வந்தேன்.
இந்த மருத்துவமனை இருக்கும் இடத்தில் பல்வேறு படங்கள் எடுக்கப் பட்டு சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன. விசு இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் படம் இந்த வீட்டில் தான் எடுக்கப் பட்டு பெரிய ஹிட் ஆனது. அதேபோல் நான் நடித்த பல படங்கள் இந்த வீட்டில் எடுக்கப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இவ்வளவு அதிர்ஷ்டமான இடத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப் பட்டிருக்கிறது . இந்த மருத்துவமனை நிறைய நோயாளிகளை குணப்படுத்த வேண்டும் ” என்று ரஜினி கூறினார்.
மூச்சுவிடக் கூட பயமா இருக்கு
" காவேரி மருத்துவமனை முதலில் ஆழ்வார்பேட்டையில் கட்டினார்கள். பின் அதற்கு பக்கத்தில் இருக்கும் கட்டிடத்தையும் சேர்த்து வாங்கினார்கள். காவேரி ஹாஸ்பிடல் எங்க இருக்குனு கேட்டா கமல் வீடு பக்கத்தில் என்று முன்பு சொல்வார்கள். ஆனால் இப்போது கமல் வீடு எங்க இருக்குனு கேட்டால் காவேரி ஹாஸ்பிட்டல் பக்கத்தில் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இப்படி சொல்கிறேன் என்று கமல் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் . கமலைச் சீண்டும் வகையில் பேசினேன் என்று பத்திரிகையாளர்கள் போட்டுவிடாதீர்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சில பத்திரிகையாளர்கள் மட்டுமே வருவார்கள் சும்மா வந்து இரண்டு வார்த்தைகள் பேசும்படி என்னிடம் சொல்லி இருந்தார்கள். இங்கு வந்து பார்த்தால் இவ்வளவு கூட்டம் இருக்கிறது. இது தேர்தல் நேரம் என்பதால் நான் மிகவும் கவனமாக பேச வேண்டியதாக இருக்கிறது. மூச்சுக்கூட விட பயமா இருக்கிறது. ” என்று ரஜினி நகைச்சுவையாக பேசியுள்ளார்.