நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘குசேலன்’ படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது.
சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிக்கு சிறப்பு தோற்றத்தில் நடிப்பது என்பது புதிது கிடையாது. ஆனால் அதெல்லாம் சூப்பர் ஸ்டாராக வளரத் தொடங்கிய காலத்தில் இருந்தது. ஆனால் 2000 ஆம் ஆண்டு பின்னால் அவர் ‘குசேலன்’ படத்தில் அப்படி ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.
பி. வாசு இயக்கிய இப்படத்தில் பசுபதி, மீனா, வடிவேலு, பிரபு, சந்தானம், கீதா, விஜயகுமார், லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், சந்தான பாரதி, தியாகு என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த குசேலன் படம் மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற கதபறயும்போல் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் மொத்தமே 1 மணி நேரம் தான் ரஜினி வருவார். ஆனால் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
கதைச் சுருக்கம்
முடி திருத்தும் ஏழைத் தொழிலாளியான பசுபதிக்கும், சூப்பர்ஸ்டாராகவே வரும் ரஜினிக்கும் இடையே சிறு வயது நட்பு இருக்கும். இதனிடையே பசுபதி கிராமத்திற்கு சினிமா ஷூட்டிங்கிற்காக ரஜினி வருவார். ஆனால் பசுபதி ரஜினி தனது நண்பன் என்பதை வெளிக்காட்டாமல் இருப்பார். அதேசமயம் கடைக்கண் பார்வை தங்கள் மீது பட்டு விடாதா என்று ரசிகர்கள் ஏங்கும் நிலையில் பசுபதி மட்டும் ரஜினியை பார்க்க போகாமல் இருப்பார். கடைசியில் அவர் சூப்பர் ஸ்டாரை எப்படி சந்திக்கிறார்? இவர்களின் நட்பு எந்த அளவில் இருந்தது என்பதை இப்படம் விளக்கியது.
இந்த படத்தில் அனைவராலும் கிளைமேக்ஸ் காட்சி ரசிக்கும்படி அமைக்கப்பட்டது. ஊரே கூடி நிற்க விழா ஒன்றில் பேசும் ரஜினி, இன்றைக்கு நான் சூப்பர் ஸ்டார் ஆக பசுபதி தான் காரணம் என சிறுவயது நிகழ்வுகளை கூறுவார். ஆனால் அவன் எங்க இருக்கானே தெரியல என கண்கலங்குவார். பின்னர் பசுபதி - ரஜினி சந்திக்கும் காட்சி இடம் பெறும். இது இன்றும் நட்பு வட்டாரங்களில் ஸ்டேட்டஸ் ஆக பகிரப்படுகிறது. படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்த படம்
தமிழ் திரைப்பட வரலாற்றில் குசேலன் படம் மூன்றாவது பெரிய வெளியீடாக அமைந்தது. ஆனால் ரிலீசுக்கு முன்பே இப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றதால் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி அடைந்தது. படத்தில் வடிவேலு சிகை அலங்கார தொழிலாலர்களை கிண்டல் செய்யும் வண்ணம் காமெடி காட்சிகளை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த படம் வெளியாவதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டு காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்பாடு செய்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினிகாந்த் கர்நாடக அரசியல்வாதிகளை கண்டித்து கருத்து தெரிவித்தார். இதனால் கர்நாடகாவில் ரஜினி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, குசேலன் படம் வெளியாகாது எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. கடைசியில் ரஜினி தனது பேச்சுக்கு விளக்கம் கொடுத்தார்.ஆனால் அவர் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியானது. இதனைத் தொடர்ந்து இப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது.