‘மன்னிப்பு கேட்க நினைச்சேன்.. ஆனால் கடைசி வரை முடியல’.. மயில்சாமி மறைவால் கலங்கிய ரஜினி..

மறைந்த நடிகர் மயில்சாமியிடம் தான் மன்னிப்பு கேட்க நினைத்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

Continues below advertisement

மறைந்த நடிகர் மயில்சாமியிடம் தான் மன்னிப்பு கேட்க நினைத்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

Continues below advertisement

ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் மயில்சாமி. 57 வயதான இவர் நேற்றைய தினம் மாரடைப்பால் காலமானார்.சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த மயில்சாமி நேற்று முன்தினம் இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். பின்னர் அதிகாலை வீடு திரும்பிய அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக சென்னை  போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மயில்சாமி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைத்தளங்களில் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

ரஜினி,கமல், விஜய், அஜித், விக்ரம், தனுஷ் என தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த மயில்சாமியை தெரியாதவர்கள் யாரும் இல்லை என்னும் அளவுக்கு பிரபலமானவர். இந்நிலையில் அவரது மறைவு செய்தி அறிந்த நடிகர் ரஜினிகாந்த், பெங்களூருவில் இருந்து அவசர அவசரமாக சென்னை திரும்பினார். இன்று காலை மயில்சாமி இல்லத்திற்கு சென்ற ரஜினி, அவரது உடலுக்கு அஞ்சலி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ”மயில்சாமி தன்னுடைய நீண்ட கால நண்பர் என குறிப்பிட்டார். அவரின் 23, 24 வயசுலேயே எனக்கு தெரியும். மிமிக்ரி ஆர்டிஸ்டா இருந்து சினிமாவுக்கு வந்தவர். இரண்டு பேரின் தீவிர ரசிகர். ஒருவர் எம்ஜிஆர். இன்னொருவர் சிவன். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திப்போம்.  அப்போது சும்மா சினிமா எப்படி இருக்குன்னு கேட்பேன். மயில்சாமி என்னிடம் சினிமா பற்றி பேசவே மாட்டார். சிவன் பற்றியும், கோயில்கள் பற்றியும் தான் பேசுவார். 

இதேபோல ஒவ்வொரு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கும் அங்க போயிருவாரு. அங்க இருக்க கூட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு எனக்கு போன் பண்ணுவாரு. ஏதோ அவரோட முதல் படத்துக்கு வர்ற கூட்டம் மாதிரி உற்சாகமா இருப்பாரு. கடந்த கார்த்திகை தீபத்துக்கு போன் பண்ணாரு. நான் ஷூட்டிங்கில் இருந்ததால போன் அட்டெண்ட் பண்ணல. அடுத்து மூன்று முறை கூப்பிட்டுருந்தாரு. அடுத்ததாக அவரை சந்திக்கும் போது மன்னிப்பு கேட்க நினைத்தேன். அதை அப்படியே மறந்து போய்ட்டேன். அவர் இப்ப மறைஞ்சு போய்ட்டாரு” என வருத்ததுடன் பதிவு செய்தார். 

மேலும், “விவேக், மற்றும் மயில்சாமி ஆகிய இரு நகைச்சுவை நடிகர்களின் மரணம் சினிமா துறை மற்றும் சமூகத்திற்கு பேரிழப்பாகும். சிவராத்திரி அன்னைக்கு மயில்சாமி இறந்தது, தீவிர பக்தனை சிவன் அழைத்துக் கொண்டார் எனலாம். இது தற்செயல் அல்ல. அவனின் கணக்கு” எனவும் ரஜினி தனது பேச்சின் போது குறிப்பிட்டார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola