இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் “லால் சலாம்” படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கேரக்டரின் தோற்றம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கிய நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்குப் பின் மீண்டும் 'ஓ சாத்தி சால்' எனும் இந்தி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாவதாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழில் “லால் சலாம்” படத்தை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராகவும், ராமு தங்கராஜ் கலை இயக்குனராகவும், பிரவீன் பாஸ்கர் எடிட்டராகவும் லால் சலாம் படத்தில் பணியாற்றுகின்றனர். லால் சலாம் கிரிகெட்டை மையப்படுத்திய கதையாக உருவாகியுள்ளது.
சிறப்பு தோற்றத்தில் ரஜினி
இதற்கிடையே யாரும் எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யாவின் அப்பாவும், நடிகருமான ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினி இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கவிருப்பது திரையுலகினர் இடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. மேலும் 33 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஜீவிதா லால் சலாம் மூலம் நடிகர் ரஜினியுடன் நடிக்கவுள்ளார். கடந்த மார்ச் 7 ஆம் தேதி திருவண்ணாமலையில் இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நடைபெற்றது.
தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ள நிலையில், இன்று நடக்கும் ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். அவர் தொடர்பான காட்சிகள் அங்கு படமாக்கப்படும் நிலையில், லால் சலாமில் ரஜினி என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு வெளியான போஸ்டரில் “மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்” என்ற கேப்ஷனில் மாஸ்ஸாக இருக்கும் ரஜினியின் கேரக்டர் இடம் பெற்றுள்ளது.
அவரின் பின்னணியில் கலவரம் தொடர்பான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரஜினியின் பாட்ஷா,காலா, தர்பார் படங்களுக்குப் பின் அவர் மும்பையை அடிப்படையாக கொண்ட கதையில் நடிப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அடுத்தடுத்து வெளியாக இருக்கும் ரஜினி படங்கள்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் “ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லால் சலாம் படத்தில் நடித்து வரும் அவர், அடுத்ததாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களையும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.