தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், திரைத்துறையில் அறிமுகமாகி இன்றோடு 48 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


ஆரம்ப கால வாழ்க்கை


1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி பெங்களூருவில் பிறந்த ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். பள்ளிப் படிப்பின் போது , ​​நாடகங்களில் நடிப்பதில் அதிக நேரம் செலவிட்ட அவருக்கு இங்கு தான் நடிப்பின் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது. பள்ளிக் கல்வியை முடித்த ரஜினிகாந்த், ஆரம்பத்தில் கூலி வேலைகள் செய்து வந்தார். அதனைத் தொடர்ந்து பேருந்து நடத்துனராக வேலை செய்து வந்தார்.


பின்னர் சென்னை திரைப்பட கல்லூரியில் நண்பர் ராஜ்பகதூர் அளித்த நிதியுதவியின் மூலம் நடிப்பு பயிற்சி பெற்ற ரஜினி, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் உருவான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இதனால் பெயர் குழப்பத்தை தவிர்க்க பாலச்சந்தர் தான் சிவாஜிராவ் என்ற பெயரை ரஜினிகாந்த் ஆக மாற்றினார். அபூர்வ ராகங்கள் படம் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இதே நாளில் தான் வெளியானது. 


ஸ்டைல் மன்னன் ரஜினி


தொடர்ந்து மீண்டும் பாலசந்தர் இயக்கத்தில் மூன்று முடிச்சு படத்தில் நடித்தார் ரஜினி. வில்லத்தனமான அவரது கேரக்டர் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு பாரதிராஜா இயக்குநராக அறிமுகமான 16 வயதினிலே படத்திலும் வில்லனாக நடித்தார். ஆனால் ஹீரோவான பிறகு ரஜினி செய்த மேஜிக் எல்லாம் வேற ரகம். திரையில் வந்தாலே போதும் என்கிற அளவுக்கு சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப் போட்டு பிடிப்பது, மாஸாக வசனம் பேசுவது என ஒரு பக்காவான கமர்ஷியல் ஹீரோவாக மாறினார். இங்கு தான் ரஜினி ‘சூப்பர் ஸ்டார்’ ஆக மக்கள் மனதில் மாறினார். 


கொண்டாடப்படும் படங்கள் 


பைரவி, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, முள்ளும் மலரும், ஜானி, மூன்று முகம், அவள் அப்படித்தான், பிரியா, நினைத்தாலே இனிக்கும், அன்னை ஒரு ஆலயம், பில்லா, காளி, பொல்லாதவன், தில்லு முல்லு, எங்கேயோ கேட்ட குரல், படிக்காதவன், நல்லவனுக்கு நல்லவன், நான் சிகப்பு மனிதன், ஆறிலிருந்து அறுபது வரை, ஸ்ரீ ராகவேந்திரா, மனிதன், மாப்பிள்ளை, அண்ணாமலை, பாட்ஷா, முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், கபாலி, காலா, பேட்ட, ஜெயிலர் என இதுவரை 169 படங்களில் நடித்திருந்தாலும் மேற்கண்ட படங்கள் ரஜினியின் நடிப்புக்காகவும், ஸ்டைலுக்காகவும் கொண்டாடப்படுகிறது. 


என்றும் சூப்பர் ஸ்டார்


6 வயது சிறுவர்கள்  முதல் 60 வயது முதியவர்கள் வரை கிட்டதட்ட 4 தசாப்தங்களாக வயது வித்தியாசமில்லாமல் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார் ரஜினிகாந்த். அவர் சினிமாவில் அறிமுகமாகி இன்றோடு 48 ஆண்டுகள் நிறைவு செய்கிறார். கருப்பு வெள்ளை, கலர், டிஜிட்டல், மோஷன் கேப்சர் என அனைத்து விதமான தொழில்நுட்பத்திலும்  நடித்தவர் ரஜினி மட்டும் தான். மேலும் நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல தளங்களிலும் ரஜினி அடியெடுத்து வைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படம் நடித்துள்ளார் ரஜினி.


தனது 24 வயதில் நடிக்க வந்த ரஜினி, தற்போது 72 வயது ஆன நிலையில், இன்றும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவும், வசூல் மன்னனாகவும் திகழ்கிறார் என்றால் அதற்கு காரணம் ரசிகர்களை மகிழ்விப்பது எப்படி என தெரிந்து வைத்திருக்கும் ரகசியம் தான் என்றால் அது மிகையல்ல...!