நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா படம் இன்றோடு 21 ஆண்டுகளை நிறைவு செய்வதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


தலைப்புச் செய்தியாக மாறிய படம் 


1999 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் படையப்பா படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.இந்த படத்துக்கு பிறகு கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாபா பட அறிவிப்பு வெளியானது. அன்றைய தேதிக்கு நாளிதழ்களில் ஒரு நடிகரின் பட அறிவிப்பு தலைப்புச் செய்தியாக வெளியானது என்றால், அது பாபா படம் தான். ஒரு வகையில் இது ரஜினிக்கு மிகவும் நெருக்கமான படம் தான். காரணம் என்னதான் விதவிதமான கதைகளில் நடித்தாலும் சில கதைகள் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். அப்படி ரஜினி தான் வணங்கும் ராகவேந்திரர் குறித்து தனது 100வது படத்தில் நடித்தார். அதன் பிறகு தான் வணங்கும் பாபாஜி பற்றி இப்படத்தில் காட்சிப்படுத்தியிருந்தார், 


குவிந்த நட்சத்திர பட்டாளங்கள் 


அண்ணாமலை, பாட்ஷா, வீரா என ரஜினியின் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா தான் பாபா படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை ரஜினியே சொந்தமாக தயாரித்திருந்தார். பாபா படத்தில் மனிஷா கொய்ராலா, நம்பியார், சுஜாதா, சங்கவி, விஜயகுமார், கவுண்டமணி, கருணாஸ், டெல்லி கணேஷ், ரியாஸ்கான், ஆஷிஷ் வித்யார்த்தி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆனால் இப்படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது. 


படத்தின் கதை


மகா அவதார் பாபாஜியின் சிஷ்யரின் மறுபிறவியாக கருதப்படும் ரஜினி ஒரு நாத்திகர். எந்நேரமும் மது, புகை பிடித்தல் என இருக்கும் அவருக்கு பாபாவின் அருளோடு, 7 மந்திரங்கள் கிடைக்கிறது. ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாத ரஜினி, அதில் 6 மந்திரங்களை வீணடிக்கிறார். அதேசமயம் இதன்மூலம் அவருக்கு கடவுள் மீது ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. மீதமுள்ள பாபாவின் ஒரு மந்திரத்தை அரசியல் கட்சி தலைவர்கள் பயன்படுத்த நினைக்கின்றனர். அவரும் கடைசி மந்திரத்தை பயன்படுத்தி பாரதி மணியை முதலமைச்சராக்குகிறார். இதனால் டென்ஷனாகும் ஆஷிஷ் வித்யார்த்தி, ரஜினியை சாமியார் ஒருவரை வைத்து கொல்ல முயற்சிக்க, இதில் பாபாவின் அம்மா சுஜாதா மரணமடைகிறார். இதனால் ரஜினி இமயமலையில் இருக்கும் பாபாஜியின் கீழ் சரணமடைய முடிவெடுக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக பாரதி மணி கொல்லப்பட, மக்கள் ரஜினியை தமிழ்நாட்டை ஆள அழைக்கிறார்கள். இதில் அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதே கதை 


மாற்றப்பட்ட கிளைமேக்ஸ் 


( ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் பேச்சும் வழக்கம் போல உச்சத்தில் இருந்து கொண்டிருந்த நிலையில் பாபா படத்தின் கிளைமேக்ஸ் ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்பட்டது. அதனால் 2022 ஆம் ஆண்டு ரி- ரிலீஸ் செய்யப்பட்ட பாபா படத்தில் ரஜினி இமயமலைக்கு சென்று, தன் தாய்க்கு அவரின் முற்பிறவியில் சேவை செய்யவில்லை என கூறுவதாகவும், அவருக்கு பாபாஜி வாய்ப்பு வழங்குவதாகவும் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டிருந்தது. ) 


பாமகவினரால் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்த ரஜினி


பாபா படத்தில் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் ரஜினி நடிக்க அதனை பாமக கடுமையாக எதிர்த்தது. முன்னதாக கர்நாடகாவில் நடந்த  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினி, வீரப்பன் குறித்து பேச, பாமகவினர் கொதித்தெழுந்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ் நேரடியாகவே விமர்சிக்க, ரஜினி ரசிகர்கள் டென்ஷனாயினர். இதுவே ரஜினி, பாமக இடையே மோதலாக மாறியது. அந்த நிகழ்ச்சி நடந்தது 2வது நாளில் பாபா படம் வெளியானது. 


ரசிகர்கள் நள்ளிரவே தியேட்டருக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். பட விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிக விலை கொடுத்து வாங்கினர். ஆனால் பாமகவினர் வடமாவட்டங்களில் சரமாரியாக ரஜினி ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தியேட்டரின்  ஸ்க்ரீன் கிழிக்கப்பட்டது. விருத்தாச்சலத்தில்  தியேட்டரின் மேலாளர் கடத்தப்பட்டார்.தமிழகம் முழுவதும் 'பாபா' படம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்பட்டது. 


இப்படியான நிலையில் ரசிகர்களுக்கு எவ்வித பிரச்சினையும் மேற்கொண்டு ஏற்பட்ட விடக்கூடாது என ரஜினி அமைதி காத்தார். ஆனால் பாபா படம் தோல்வியை தழுவியது. தொடர்ந்து விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கினார். இப்படி பல சர்ச்சைகளை கடந்த பாபா படம் ரஜினி ரசிகர்களுக்கும் என்றும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.