லால் சலாம் படம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய ரஜினியின் மூத்த மகளும், லால் சலாம் படத்தின் இயக்குநருமான ஐஸ்வர்யா பேசும்போது, “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அதை கேக்குறப்ப மனசு கஷ்டமா இருக்கு. அவர் அப்படி இருந்திருந்தா லால் சலாம் படத்தில் நடிச்சிருக்கவே மாட்டார். நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி லால் சலாம் படம் நிச்சயம் உங்களை பெருமைப்படுத்தும்” என கூறியிருந்தார். மகளின் பேச்சைக் கேட்டு ரஜினி கண் கலங்கினார். 


இப்படியான நிலையில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் 1993-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த வள்ளி படத்தின் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த படத்துக்கு கதை, திரைக்கதையை ரஜினி தான் எழுதியிருப்பார். அவரது நண்பராக கே.நட்ராஜ் படத்தை இயக்கியிருந்தார். மேலும் வேலு, பிரியா ராமன், வடிவேலு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். 






அந்த படத்தில் ஒரு காட்சி இடம் பெறும். அதில், ‘ஒருவர் அயோத்தியில் மசூதியை இடிச்சிட்டாங்களாம். அந்த இடத்துல ராமர் கோயில் கட்டப் போறாங்களாம்’ என நியூஸ் பேப்பர் படித்துவிட்டு அந்த பக்கம் சென்று கொண்டிருக்கும் ஊர்காரரை அழைத்து விஷயத்தை சொல்லுவார். அதைக்கேட்டு அந்த நபர், ‘நம்ம இடத்துல நாம கோயில் கட்டக்கூடாதா? - அயோத்தியில ராமர் கோயில் கட்டித்தானே ஆகணும்’ என கூறுவார். அங்கிருக்கும் இன்னொருவர், ‘அயோத்தியில அதே இடத்துல மசூதியும் கட்டணும்ன்னு சொல்றாங்களே?’ என பேசிக்கொள்வது போன்ற காட்சிகள் இருக்கும். 


அதற்கு பதில் சொல்லும் ரஜினி, ”அயோத்தியில மட்டும் ராமர் கோயிலையும்,மசூதியையும் கட்டி என்னயா பிரயோஜனம். முதல்ல உங்க இதயத்துல ராமர் கோயிலும், மசூதியும் கட்டுங்க. இந்து, கிறிஸ்டியன், முஸ்லீம்ன்னு சொல்லிகிட்டு இருக்கீங்க. இந்தியாவுல இருக்குறவங்க என்னைக்கு இந்தியன்னு நினைப்பு வருதோ அன்னைக்கு தான் இந்த நாடு உருப்படும்” என வசனம் பேசியிருப்பார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.