ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி கதை சொன்னாலும் சொன்னார், அவரது ரசிகர்கள் இருக்கிற பழைய வீடியோவை எல்லாம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
4வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “ஜெயிலர்” படத்தை தயாரித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169வது படமாக உருவான இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி என பலரும் நடித்துள்ளனர்.
ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினி நடித்துள்ள நிலையில், படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ளது. இப்படியான நிலையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ரஜினி, “நாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் இலக்கை நோக்கி சென்றால் முன்னேறி விடலாம்” என்ற அறிவுரையை கழுகு - காகம் கதை வழியாக ரசிகர்களுக்கு தெரிவித்தார். இது இணையத்தில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் காரசார விவாதமும் நடைபெற்றது. இப்படியான நிலையில் ரஜினியின் பழைய வீடியோக்கள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
அதில் சிவாஜி படத்தின் 175வது நாள் விழாவில் பங்கேற்ற ரஜினி, ஆசைப்படுவதற்கும், அதை அடைவதற்கும் உண்டான கபில முனிவரின் கருத்துகளை தெரிவித்திருந்தார். அந்த வீடியோ ட்ரெண்டிங்கில் உள்ளது. அதில், “சாங்கிய யோகா நான் ஃபாலோ பண்றேன். அதுல என்ன சொல்றாங்கன்னா ஆசைப்படு.. ஆனால் அதை அடைவதற்கு வியூகம் சேர்க்க வேண்டும். அதை சரியாக செயல்படுத்த வேண்டும். அப்படி செய்யும் போது வரும் பலனை முதலில் நீ அனுபவி. மீதமுள்ளதை கொடுத்து விடு. சாப்பிட்டத்தை உடம்பிலேயே வைத்து கொண்டால் உடம்பு கெட்டு போயிடும். சம்பாதிச்சதை நாமளே வைத்துக் கொண்டால் வாழ்க்கை கெட்டுப் போயிடும்.
கபிலமுனி சொல்கிறார். ஆசைப்படுவதற்கு உனக்கு தகுதி இருக்கா.. அதை உன்னாலே அடைய முடியுமா.. சைக்கிளே வாங்க முடியல உன்னால கார் வாங்க முடியுமா? . இது பேராசை இல்ல.தகுதி இருக்கா என முதலில் ஆராய வேண்டும். பின்னர் தகுதி இருந்தால் அந்த விஷயத்தை அடைவதற்கு தேவையான நபர்கள், புத்தகங்கள் இதையெல்லாம் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் சரியான நபர்களை சேர்த்துக் கொண்டு அந்த ஆகாயமே கீழே விழுந்தாலும் மனதை மாற்றாமல் செய்தால் நீ நினைத்ததை அடைவாய் என்பதை சாங்கிய யோகா சொல்கிறது” என தெரிவித்துள்ளார்.