நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேரமுறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.
அந்த வகையில் உலகின் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2023 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணி முடிந்து 2023 புத்தாண்டு பிறந்தது. அதைதொடர்ந்து, ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இந்தியாவிற்கு முன்னதாக அடுத்தடுத்து புத்தாண்டை வரவேற்றன. இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. ஆட்டம் பாட்டம் என வயது வித்தியாசமில்லாமல் வீதிகளில் மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கோயில்களில் சிறப்பு வழிபாடு, அரசியல், திரைப்பிரபலங்களின் வாழ்த்துகள் என புத்தாண்டு ஆரவாரமாக சென்று கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியிலும் போட்டிப்போட்டுக் கொண்டு புதுப்படங்கள் ஒளிப்பரப்பட்டு வருகிறது.
இதனிடையே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், நள்ளிரவு 12 மணிக்கே தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். அவர் தனது பதிவில் உன் வாழ்க்கை உன் கையில் என்ற ஹேஸ்டேக்குடன் அதனை பதிவிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை முதலே ரஜினியை காண அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.
அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து, வணக்கம் சொல்லி, முத்தங்களை பறக்கவிட்டு தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விரைவில் ஜெயிலர் அப்டேட்?
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு முத்துவேல் பாண்டியன் என்ற ரஜினியின் கேரக்டர் பெயர் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ஜெயிலர் வீடியோவோடு புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்திருந்தது. கோடை விடுமுறையில் படம் வெளியாகலாம் என கூறப்படும் நிலையில் இனி அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.