நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வழக்கம்போல அது காப்பிகேட் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான  சன் பிக்சர்ஸ், எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடந்து  நடிகர் ரஜினிகாந்துடன் 4வது முறையாக இணைந்துள்ள படம் “ஜெயிலர்”. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 


ஜெயிலர் படம் சுதந்திர தின வெளியீடாக வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. தொடர்ந்து ஜூலையில் படத்தில் இடம் பெற்றுள்ள  காவாலா, ஹூக்கும், ஜூஜூபி ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. 



இதில் ரஜினி பேசிய கருத்துகள் இணையத்தில் கடும் விவாதத்தை கிளப்பியது. இந்த  ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 6 ஆம் தேதி சன் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என கூறப்படுகிறது. 


இப்படியான நிலையில், ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் ரஜினி,  தான் என்றும் சூப்பர் ஸ்டார் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பேசும் பன்ச் வசனங்களுக்கும் நல்ல வரவேற்பை பெற்றது. யூட்யூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ள ஜெயிலர் ட்ரெய்லர், 16 மணி நேரத்தில் 87 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. 


இதனிடையே ட்ரெய்லரில் ரஜினி ஒரு காட்சியில், “ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது.. வீச்சு தான்” என்ற டயலாக் இடம் பெறும். இதுபோன்ற வசனங்களைப் பார்த்த ரஜினி ரசிகர்களை சில்லறையை சிதறவிட்டு நெல்சனை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதே வார்த்தைகளுடன் கூடிய காட்சி 1988 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ படத்திலேயே இடம் பெற்றுள்ளது. அதில், ‘இனிமே என் வீட்டுப்பக்கம் வந்த பேச்சு கிடையாது.. வீச்சு தான்’ என்ற வசனம் வரும்.  இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனைப் பார்த்து ஒரு சிலர் நெல்சனை கிண்டல் செய்து வருகின்றனர்.