கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடல் ஸ்டேஜில் பாடப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த க்யூட் ரியாக்‌ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கடந்த 2000 ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் பார்த்திபன், முரளி, மீனா, மாளவிகா, வடிவேலு, மனோரமா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் ‘வெற்றிக்கொடிகட்டு’ . தேவா இசையமத்திருந்த இப்படத்தில் பா.விஜய் கருப்பு நிறத்தின் பெருமைகளை மையமாக கொண்டு ‘கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு’ என்ற பாடலை எழுதி அனுராதா ஸ்ரீராம் பாடியிருந்தார்.






இந்த பாடல் வெளியாகி இன்றைய தேதி வரை அனைவராலும் ரசிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது என்றால் அதன் வரவேற்பை நாம் யூகித்து கொள்ளலாம்.  






இதில் ‘நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்பு தான்’ என்ற வரி வரும். பொதுவாக சினிமாவில் சொல்லப்படும் நிறம், தோற்றம் போன்ற உருவ கேலிகளை ரசிகர்கள் கடுமையாக விமர்சிப்பார்கள். ஆனால் கருப்பு நிறமாக இருந்தாலும் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். கருப்பு அழகு தான் என பாசிட்டிவ் வகையில் எழுதப்பட்டதை ரஜினி ரசிகர்களும் வரவேற்றார்கள். 






இதற்கிடையில் தனியார் ஊடகம் சார்பில் சென்னையில் நேற்று இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் ‘கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு’ பாடலும் பாடப்பட்டது. அப்போது ரஜினியை பற்றிய குறிப்பிட்ட வரி வந்ததும் ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர். அந்த சத்தம் அடங்கவே சிறிது நேரம் ஆன நிலையில் அனுராதா ஸ்ரீராம் பாடல் வரியை பாட ரஜினிகாந்த் சிரித்து கொண்டே ரசித்தார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.