ஆயிரம் படங்களுக்கு மேல் கதை - வசனம் எழுத்திய சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவுக்கு வீடியோ வாயிலாக குணசித்திர நடிகர் எம்.எஸ் பாஸ்கர் தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார். 



அந்த வீடியோவில், “வணக்கம் நான் உங்கள் எம்.எஸ்.பாஸ்கர். ஒரு அதிர்ச்சியான செய்தி, வயது மூப்பு காரணமாக அமரராகி விட்டார். என்னுடைய குருநாதர். எனக்கு டப்பிங் செய்ய கற்றுக்கொடுத்த ஆசான். அய்யா பெருமதிப்பிற்குரிய உலக புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள், நேற்று மாலை 6.40 மணிக்கு காலமாகிவிட்டார். வருத்தமாக இருக்கிறது. நிச்சயமாக நான் சென்னையில் இருந்திருந்தால் வந்திருப்பேன் என அறிவார்கள். நான் வெளியூரில் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த வீடியோ வாயிலாக எனது வருத்தத்தை வெளிபடுத்துகிறேன். அவரது ஆன்மா மாதாவின் நிழலில் இளைப்பாறட்டும். 






எப்போதும் என்னிடம் மாதா ஆசி தருவார், மாதா ஆசி தருவார் என சொல்லிகொண்டே இருப்பார். கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு, அடிக்கடி அவரை சந்திக்க முடியவில்லை. திரையுலகத்தை வயது மூப்பு காரணமாக ஒதுங்கி இருந்தார். முதலமைச்சர் முக ஸ்டாலின் போய் அவரை பார்த்து பணமுடிப்பை வழங்கி வந்துள்ளார்” என தெரிவித்தார்.






தொடர்ந்து, சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவுக்கு எம்.எஸ்.பாஸ்கர் கவிதை வாயிலாகவும் தனது அஞ்சலி செலுத்தினார். அதில், 


”அப்பாவுக்கு அஞ்சலி".


தமிழ் ஓய்ந்ததோ?
தன்னிகரற்ற எழுத்து சாய்ந்ததோ?


தமிழை தங்கு தடையின்றி, பிழையறப்பேச இந்த எளியவனுக்கு படிப்பித்த என் 'ஆசான்' விண்ணுலகம் சென்றாரோ...?


"டேய்..பாஸ்கரா" என்று என்னை அன்போடு அழைத்த அக்குரலை இனி எப்பிறப்பில் கேட்பேன்?


அரவணைத்தும், கண்டித்தும் என்னை வழி நடத்திய என் குருநாதர் அமரரானாரோ?


இந்நிலையல்ல... எந்நிலைக்கு யான் சென்றிடினும் என்னை ஏற்றி விட்ட ஏணி அவரன்றோ..?


மறக்க இயலுமோ? என் இறுதி மூச்சு உள்ளவரை 'அப்பா' தங்களை மறக்க இயலுமோ?


தாங்கள் பேசாவிட்டாலும் தங்கள் வசனங்கள் காலாகாலத்திற்கும் பேசப்படுமன்றோ..?


மீண்டும் தங்கள் வசனங்களை தாங்கள் சொல்லித்தர தங்கள் முன்பு நின்று தங்கள் சீடன் நான் 'டப்பிங்' பேசுவேனா?


"சென்று வாருங்கள் அப்பா"...


மாதாவின் நிழலில் இளைப்பாற...


தனது அன்பான கருத்துகளை அஞ்சலியாக பதிவிட்டார்.