மக்களவைத் தேர்தல் முடிவுகள்


2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதன்படி தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. 


தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் 293 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளன. இதில் பாஜக மட்டும் தனியாக 240 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது.  400 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை கட்சியாக அமைப்போம் என்று கூறிய பாஜகவால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. மத்திய அமைச்சர்கள்  எல். முருகன், அஜய் மிஸ்ரா தெனி, அர்ஜூன் முண்டா, ராஜீவ் சந்திரசேகர், வி. முரளிதரன், மகேந்திர நாத் பாண்டே, சாத்வி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்ட பலர் இந்த மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.


தமிழ்நாட்டில் ஒரு தொகுதியைக் கூட பாஜகவால் வெல்ல முடியவில்லை. காங்கிரஸ் தனித்து 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 230 கூட்டணிகளில் வெற்றிவாகை சூடியது. இந்த நிலையில், இன்று நடந்த தேசிய ஜனநாயக கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுவின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கிறது. 


மோடி பிரதமராகப் பதவியேற்றால், ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆகும் பெருமையைப் பெறுவார்.


ரஜினிகாந்த் வாழ்த்து






மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதையும் தமிழகத்தில் திமுக கூட்டணி நாற்பது தொகுதிகளில் வெற்றிபெற்றதையும் பாராட்டி பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில், கடந்த வாரம் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் " தமிழ்நாட்டில் 40 தொகுதிகளில் வெற்றிபெற்ற என்னுடைய நண்பர் மரியாதைக்குரிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப்போகும் மதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் " என்று கூறினார். 


மோடி ஆட்சியமைக்கும் போது ரஜினிகாந்த் டெல்லி சென்று அவரை சந்திப்பாரா என்கிற கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், ”பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. மூன்றாவது முறையாக மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.


டெல்லியில் பதவி ஏற்பு நிகழ்வுக்கு செல்வதற்கு குறித்து முடிவெடுக்கவில்லை.


ரிஷிகேஷ், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றேன். அருமையாக இருந்தது. ஒரு முறையும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறது.” என்று பதிலளித்துள்ளார்.