நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் தற்போது “வேட்டையன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ஃபஹத் ஃபாசில், ரக்‌ஷன், சர்வானந்த் என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த படத்தின் ஷூட்டிங் மும்பை, கேரளா, தமிழ்நாட்டில் சென்னை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே வேட்டையன் படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து அபுதாபி சென்ற ரஜினி சில நாட்கள் ஓய்வுக்குப் பின் அங்கிருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். 






இதனிடையே வழக்கமாக தன்னுடைய படங்களின் படப்பிடிப்பு முடிந்தாலோ அல்லது ரிலீஸ் தேதிக்கு முன்னாடியோ ரஜினிகாந்த் இமயமலை செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று அவர் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். 


சென்னை போயஸ் கார்டனில் இருந்து சென்னை விமான நிலையம் புறப்பட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஆன்மீக பயணம் மேற்கொள்ள உள்ளீர்கள். மீண்டும் மீண்டும் இமயமலை பயணம் செல்வது எப்படி இருக்கிறது? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். அந்த முறை அங்கு சென்று விட்டு கேதர்நாத், பாபாஜி குகை எல்லாம் செல்ல உள்ளேன்” என கூறினார். 


தொடர்ந்து, “மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கிறீர்களா?” என கேட்டதற்கு, “மன்னிக்கவும். அரசியல் கேள்விகள் வேண்டாமே!” என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, “தமிழ் சினிமாவில் இசையா? கவிதையா? என்ற பிரச்சினை போய்க் கொண்டிருக்கிறதே?” என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “கைகூப்பி அண்ணா நோ கமெண்ட்ஸ்” என சொல்லி வழக்கமான தன்னுடைய சிரிப்பை பதிலாக ரஜினிகாந்த் அளித்தார்.