நடிகர் ரஜினிகாந்தின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் வெளியான ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படம் இன்றோடு 39 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
அன்புள்ள ரஜினிகாந்த்
அறிமுக இயக்குநர் கே. நட்ராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் அம்பிகா மற்றும் பேபி மீனா உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’. இளையராஜா இசையமைத்த இப்படம் இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது என்றே சொல்லலாம். தூயவன் தயாரிப்பில் உருவான இப்படம் 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ஜெய்ஷங்கர், கே. பாக்யராஜ், பார்த்திபன், கே. நடராஜ் உள்ளிட்டோர் கெளரவ வேடத்தில் நடித்திருந்தனர்.
இடது கை செயலிழந்த மற்றும் இதய பிரச்சினை கொண்ட குழந்தையான மீனா அனாதை இல்லத்தில் வளர்கிறார். பெற்றோர் கைவிட்டது மற்றும் மற்ற குழந்தைகள் போல இல்லாததது அவருக்குள் முரட்டுத்தனமான குணத்தை உண்டாக்குகிறது. மதர் சுப்பீரியரைத் தவிர அனைவரிடமும் எரிந்து விழுவார். அப்போது ஒரு நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தருவார். அவரிடமும் மீனா கோபப்படுவார். ஆனால் ரஜினியோ மீனாவின் பின்னணியை அறிந்து கொள்வார். இதனிடையே ரஜினியின் படம் பார்த்து தன் தவறை எண்ணி வருத்தப்படும் மீனா அதன்பின் அவருடன் அன்போடு உறவாடுவார்.
இதனிடையே நோய் முற்றிய நிலையில் அனாதை இல்லத்தில் தன்னை கவனித்துக் கொண்ட அம்பிகா தான், உண்மையான அம்மா என்பது தெரிய வருகிறது. இதன் பிறகு மீனாவின் நிலை என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதையாகும்.
எளிமையான ரஜினி
படம் முழுக்க நடிகராகவே ரஜினி நடித்திருப்பார். ஆனால் கதையின் போக்கை கருத்தில் கொண்டு எந்தவித ஆர்ப்பாடமும் இல்லாமல் மிகவும் எளிமையாக நடித்திருந்தார். இப்படத்தில் பணம் எதுவும் வாங்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார். முதலில் 6 நாட்கள் கால்ஷீட் கொடுக்கப்பட்ட நிலையில், பின்பு 10 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. மீனா படத்தில் ரஜினிகாந்தின் வீட்டிற்கு தேநீர் அருந்தச் செல்லும் காட்சி உண்மையாகவே அவரது வீட்டில் படமாக்கப்பட்டது
இளையராஜா இசையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஆல் டைம் பேவரைட் பாடலாக “கடவுள் உள்ளமே.. கருணை இல்லமே” பாடல் அமைந்தது. இதனை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா பாடியிருந்தார். மேலும் முத்துமணி சுடரே வா, இளங்குயிலே உள்ளிட்ட பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. அதேசமயம் முத்துமணி சுடரே வா பாடலில் நடு நடுவே வரும் ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க? என்ற வார்த்தை இன்றும் பிரபலம். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா பின்னாளில் இதே ரஜினிக்கு ஜோடியாக எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இப்படி எண்ணற்ற சிறப்புகளை கொண்ட அன்புள்ள ரஜினிகாந்த் என்றும் அன்புடன் ரசிகர்களால் கொண்டாடப்படும்..!