தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராஜேஷ். கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் உலா வந்த ராஜேஷ் இன்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் தனது மரணத்திற்கு முன்பு அளித்த பேட்டியில் தான் திரையுலகில் பெரிய நட்சத்திரம் ஆகாமல் இருந்தது ஏன்? என்று கூறியது வைரலாகி வருகிறது. 

எம்.ஜி.ஆர். வைத்த முற்றுப்புள்ளி:

தனியார் யூ டியூப் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பணம் மேல எல்லாருக்கும் ஆசை இருக்கும். பெரிய பணக்காரர் ஆக வேண்டும், பெரிய நடிகர் ஆக வேண்டும், பெரிய பதவி அடைய வேண்டும் என்ற ஆசை எனக்கு கமாவாகவும், முற்றுப்புள்ளியாகவும் வைத்தது எம்.ஜி.ஆர்தான். அவரை நான் பார்க்கும்போது எனக்கு வயது 36. அவர் அமெரிக்காவில் இருந்து வந்து பட்ட கஷ்டம், அவர் எப்படி தலைமைச் செயலகத்திற்கு போனார்? எவ்ளோ வீட்டிற்குள்ளே கஷ்டப்பட்டார்? என்பதை நேரடியாக பார்த்தவன்.

பெரிய பதவி வேண்டாம்:

பெரிய பதவியை நாம் அடையக்கூடாது. இரண்டாவது வரிசையிலே இருந்துவிட வேண்டும் என்று அப்போதே முடிவு எடுத்துவிட்டேன். பள்ளியில் மாணவர்கள் தலைவராகவோ, வகுப்பு தலைவராகவோ நான் ஆகமாட்டேன். வேண்டவே வேண்டாம் என்பேன். உலகில் மனிதர்களை நான் மூன்றாக பிரிப்பவன்.

முதலில் தலைவர்கள் மற்றும் படைப்பாளிகள். 3 சதவீதம். காரல் மார்க்ஸ் படைப்பாளி, லெனின் தலைவர். இந்த 3 சதவீதத்திற்குள் நான் போகவில்லை. அடுத்து 17 சதவீதம். அந்த 3 சதவீதத்தை அடைய போராடுகிறவர்கள். எஞ்சிய 80 சதவீதம் சாதாரணமாக காலை ஆட்டிக்கொண்டு, 3 வேளை சாப்பிட்டுக்கொண்டு, அடுத்தவர்களை விமர்சித்துக்கொண்டு, கிண்டல் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 

மனித மிருகங்கள்

அவர்களை மனித மிருகங்கள் என்று கூறுகிறார்கள். எனக்கு 17 சதவீதமே போதும். எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள், முதலிடத்திற்கு வந்துவிட்டு கீழே விழாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள் அல்லவா? அது கஷ்டம். எனக்கு அது வேண்டாம். நல்லா சமைச்சு சாப்பிட்டு நல்லாதான் இருக்கேன். முதல் கட்டத்திற்கு வர நிறைய பாடுபடனும், எல்லாருடைய விமர்சனத்தையும் தாங்கனும். 

இவ்வாறு அவர் பேசினார். 

நடிகர் ராஜேஷ் எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளர். இவர் அதிமுக-வில் தன்னை இணைத்து கட்சிப்பணியும் ஆற்றியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு ஜெயலலிதா- ஜானகி ராமச்சந்திரன் என்று அதிமுக பிரிந்தபோது ஜானகிக்கு ஆதரவாக செயல்பட்டவர். நடிகர் ராஜேஷ் நடிகராக மட்டுமின்றி பேச்சாளராகவும், தொழில் முனைவோராகவும் திகழ்ந்தவர். தனது திரை அனுபவங்களை யூ டியூப் தொலைக்காட்சியிலும் பகிர்ந்துள்ளார். நடிகர் ராஜேஷ் பின்னர் ஜெயலலிதாவுடனும் மிகுந்த மரியாதையுடன் இருந்தார். கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது மிகுந்த மரியாதையுடனே நடிகர் ராஜேஷ் காணப்பட்டார்.