நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தன் வாழ்க்கையில் நடந்த மாற்றம் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


பின்னணி நடனக் கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ராகவா லாரன்ஸ், அஜித் நடித்த அமர்களம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தொடர்ந்து அற்புதம், பார்த்தாலே பரவசம், திருமலை உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த அவருக்கு 2007 ஆம் ஆண்டு வெளியான “முனி” படம் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றி பாண்டி, ராஜாதி ராஜா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்திருந்தார். 


இதில் முனி மற்றும் காஞ்சனா படத்தின் 3 பாகங்களையும் ராகவா லாரன்ஸே இயக்கியிருந்தார். தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், இதுமட்டுமல்லாமல் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார். இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மிக உயரிய அறுவை சிகிச்சைகளுக்கும் அவர் உதவியுள்ளார். இதனிடையே அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


 






அதில், என் வாழ்க்கையில் ஒரு மாற்றம், இனி நான் யாருக்கு உதவி செய்தாலும், அவர்கள் என் காலில் விழக்கூடாது என கருதுகிறேன். அவர்களின் காலில் நான் விழுந்துதான் என் சேவையைச் செய்வேன். நீண்ட நாட்களாக எனக்குள் இந்த ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர காத்திருந்தேன். இன்று அதற்கான முதல் அடி எடுத்து வைக்கிறேன்.


பொதுவாகவே ஏழைகள் பணக்காரர்களின் காலில் விழுந்து உதவி கேட்பதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன், அந்தப் பணக்காரர்கள் தங்களுக்கு உதவி செய்த பிறகும் அவர்கள் மீண்டும் அவ்வாறே செய்கிறார்கள். இதுபோன்ற சில சம்பவங்களால் மட்டும் நான் தனிப்பட்ட முறையில் அதைப் பார்க்க விரும்பவில்லை என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களும் இதற்கு காரணம், அவற்றை உங்கள் அனைவருடனும் பதிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு குடும்பத்தினர் தங்கள் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக உதவி கேட்டு என்னிடம் வரும்போது என் கால்களில் விழ வந்தனர். நான் விலகிச் சென்று, உதவி தேவைப்படும் அந்த குழந்தையைப் பார்த்தேன். அந்த குழந்தை தனது பெற்றோர் என் காலில் விழுந்தவுடன் உடனடியாக அழத் தொடங்குகிறது.


பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக படும் வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஏனென்றால் குழந்தைகளுக்கு முன்னால் எந்த அப்பாவும் ஹீரோவாகவே இருக்க விரும்புவார்கள்.வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகும், அந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை என காலில் விழவைக்கிறார்கள், குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று நம்புகிறவன் நான்... அதனால் கடவுள் என் காலில் விழுவது போல் அப்போது உணர்ந்தேன். சில சமயங்களில் நான் கிராமங்களுக்குச் சென்று என் தாயின் வயதில் உள்ள முதியவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களும் அதையே செய்கிறார்கள். இது சரியானதா?


அவர்கள் தான் எனக்கு புண்ணியம் வழங்குகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன், எனவே நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில்தான் நான் விழுந்து அவர்களின் ஆசிகளைப் பெறுவேன். எனது சிறிய ஈகோவும் மறைந்து போனது. இன்றுமுதல் நான் எனது ரசிகர்களைச் சந்தித்து இந்த மாற்றத்தை எனக்குள் கொண்டுவர ஒரு சிறு முயற்சியை மேற்கொள்வேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு தேவை, இது தொடர்பான வீடியோவை விரைவில் வெளியிடுகிறேன். #சேவையே கடவுள் என தெரிவித்துள்ளார்.