நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘இந்தியன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் அந்த காலக்கட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் 2 ஆம் பாகம் உருவாக வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் 22 ஆண்டுகள் கழித்து கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியன்  2 குறித்த அறிவிப்பு வெளியானது. 


லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், விவேக், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி 2019 ஆம் ஆண்டு முதல் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படத்துக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில்  கிரேன் கீழே விழுந்து படத்தின் உதவி இயக்குநர் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் கொரோனா ஊரடங்கு, கமல் அரசியலில் கவனம் செலுத்தியது, ஷங்கர்- லைகா நிறுவனம் இடையேயான கருத்து மோதல் ஆகியவற்றால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.






தொடர்ந்து நடிகர் விவேக்கின் மரணம், காஜல் அகர்வால் குழந்தை பெற்றது ஆகிய காரணத்தால் இவர்களுக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கமல், ஷங்கர், லைகா நிறுவனம் ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கியது. அதேசமயம் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். 


இதனால் இந்தியன் 2 படத்தின் துணை கதாபாத்திரங்கள் நடிக்கும் காட்சிகளை இயக்குநர்கள் வசந்தபாலன், சிம்புதேவன் மற்றும் அறிவழகன் ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் பத்து நிமிடங்கள் வரை ஓடும் ஒரு சிங்கிள் ஷாட் காட்சியை 14 மொழிகளில் கமல்ஹாசன் டேக் எதுவும் எடுக்காமல் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைப் படப்பிடிப்பில் இருந்து பார்த்த படக்குழுவினர் கமலின் நடிப்பில் மிரண்டு போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.