ரசிகர்களை சந்திக்க இனிமேல் தானே வருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நடனக் கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ராகவா லாரன்ஸ் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களிடத்தில் பிரபலமாக தொடங்கினார். தொடர்ந்து தமிழில் உன்னைக் கொடு என்னை தருவேன் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அற்புதம், தென்றல் என சில படங்களில் நடித்த லாரன்ஸூக்கு 2007 ஆம் ஆண்டு வந்த முனி படம் திருப்புமுனையாக அமைந்தது.
தெலுங்கில் மாஸ், ஸ்டைல், ரபேல், டான் உள்ளிட்ட படங்களையும், முனி,காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சானா 3 ஆகிய படங்களை தமிழிலும், லட்சுமி என்ற இந்தி படத்தையும் ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார். கடைசியாக சந்திமுகி 2, ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். இதில் ஜிகர்தண்டா படம் சூப்பர்ஹிட் ஆனது. தொடர்ந்து துர்கா, அதிகாரம், புல்லட் உள்ளிட்ட படங்களில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்.
அதேசமயம் நடிகர் விஜயகாந்த் மறைந்த நிலையில், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றையும் ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். அதில் விஜயகாந்த் மகன் நடிக்கும் படத்தில் எந்த வித கேரக்டர் கொடுத்தாலும் நடித்துக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். அதேபோல் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. இதனிடையே ரசிகர்களை சந்தித்து அவ்வப்போது புகைப்படம் எடுக்கும் மற்றும் உரையாடும் நிகழ்வை நடத்தும் லாரன்ஸ் தற்போது அதிரடியாக ஒரு முடிவெடுத்துள்ளார்.
அதில், “வணக்கம் நண்பர்களே ரசிகர்களே, கடந்த முறை சென்னையில் ரசிகர்கள் சந்திப்பு போட்டோஷூட்டின் போது எனது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரை விட்டார். மிகவும் மனவேதனையாக இருந்தது. அன்று, என் ரசிகர்கள் எனக்காக பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன், ஆனால் நான் அவர்களுக்காக பயணம் செய்து அவர்களின் ஊரில் போட்டோஷூட் நடத்துவேன். நாளை முதல் தொடங்குகிறேன், முதல் இடம் விழுப்புரம் லோகலட்சுமி மஹாலில் உள்ளது. நாளை சந்திப்போம்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: Director Atlee: ஜவான் படத்தை விட பெரிய சம்பவம் இருக்கு - இயக்குநர் அட்லீ கொடுத்த அப்டேட்