விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் KPY பாலா. அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அவரின் பப்ளிசிட்டி வேற லெவலுக்கு எகிறியது. அதன் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு பெற்று தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 


 



ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னுடைய பயணத்தை தொடங்கி ஒரு தொகுப்பாளர், நடிகர், சமூக அக்கறையாளர் என மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கோடி கணக்கில் சம்பாதிப்பவர்கள் கூட பாலாவின் அளவுக்கு மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்யவார்களா என்றால் அது சந்தேகம் தான். தனக்கு வரும் வருமானத்தில் இருந்து பெரும்பகுதியை ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார். 


குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற முதியவர்களை அரவணைப்பது, மாற்றுத்திறனாளிக்கு உதவுவது, போதிய மருத்துவ வசதி இல்லாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவ உதவி, புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு பண உதவி இப்படி பலருக்கும் பல வகையில் கரம் நீட்டி ஆதரவு கொடுத்து வருகிறார் பாலா. சமீபத்தில் கூட பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார்.  


KPY பாலாவின் இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டி இனி அவர் செய்யும் நலத்திட்டங்கள் அனைத்திலும் தன்னுடைய பங்கும் இருக்கும் என தெரிவித்து பாலாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். அந்த வகையில் அவர்கள் இருவரும் இணைந்து 15 லட்சம் ரூபாய் செலவில்  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இரும்பேடு அரசுப் பள்ளியில் கழிப்பிடம் கட்டி கொடுத்தனர் என்ற தகவல் வெளியானது.


 




அதை தொடர்ந்து KPY பாலா மற்றும் நடிகர் லாரன்ஸ் இருவரும் இணைந்து திருமணமான ஆரம்ப காலகட்டத்திலேயே கணவனை இழந்து மூன்று பெண் குழந்தைகளுடன் வாழ்வாதாரத்தை நடத்த ஆடல்பாடும் ஏழை பெண்மணி முருகம்மாளுக்கு உதவியுள்ளனர். எலெக்ட்ரிக் ட்ரெயினில் சமோசா விற்று குடும்பத்தை நடத்தி வரும் அவருக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்கி ஓட்ட வேண்டும் என்பது தான் பல நாள் கனவாக இருந்தது. அதை தெரிந்து கொண்டு அந்த ஏழை பெண்மணிக்கு புதிய ஆட்டோ ஒன்றை சர்ப்ரைஸாக வாங்கி கொடுத்துள்ளனர் பாலா மற்றும் நடிகர் லாரன்ஸ். ஆனந்தத்தில் அந்த பெண்மணி நடிகர் லாரன்ஸையும் பாலாவையும் கட்டியணைத்து நன்றி தெரிவித்துள்ளார். 






ஆதரவற்றவர்களுக்கு இவர்கள் செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவைக்கு நிகரானது. இவர்களின் இந்த சேவையை பாராட்டி திரை பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.