சாமானியன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி ராமராஜனுடனான சுவாரசிய அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்


இது குறித்து நடிகர் ராதாரவி பேசும்போது, “ ராமராஜனுக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் அவரும் ஆர்.ஆர் நானும் ஆர்.ஆர். நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு ராமராஜன் போட்டியாக இருந்ததாக சொன்னார்கள்.




 


ஆனால் உண்மை அதுவல்ல. ராமராஜன் மிகவும் நல்ல மனிதர். அவரது படம் ஓடியது அவ்வளவுதான்.


ராமராஜனை பின் தொடர்ந்து ரஜினி 


ராமராஜன் பால்காரனாக நடித்ததைப் பார்த்து ரஜினிகாந்த் அண்ணாமலை படத்தில் பால்காரனாக நடித்தார். நான் ராம.நாராயணன் இயக்கத்தில் பேய்வீடு படத்தில் நடித்த சமயத்தில் ராமராஜன் அந்தப்படத்தின் உதவி இயக்குனராக ராமராஜனை எனக்கு தெரியும்.




அப்போதே அவரிடம் சில விஷயங்களை கவனித்து சீக்கிரமாக நீ நடிகன் ஆகிவிடுவாய் என்று சொன்னேன்.கரககாட்டகாரன் படம் வெளியாகி அனைவர் மத்தியிலும் ஒரு வித பயத்தை உண்டாக்கிவிட்டது. அதன்பின்னர் ராமராஜன் படம் வெளியாகும் போதெல்லாம் அனைவருக்கும் பயம் இருந்தது.


விக்கா என கேட்ட கமல் 


ஒரு முறை கமல்ஹாசன் ஏர்போர்ட்டில் ராமராஜனை சந்தித்த போது அவரின் முடியை தூக்கி பார்த்தார். என்ன என்று கேட்ட போது அது முடியா அல்லது விக்கா என்று தெரிந்து கொள்ள பார்த்ததாக சொன்னார். சாமானியன் வேற ரூட்டில் போயிருக்க வேண்டிய படம். இதன் நல்ல நேரமோ என்னவோ ராமராஜன் இந்த படத்தில் வந்து இணைந்து விட்டார்.” என்று பேசினார். 




1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராமராஜன், தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன், என்னை பெத்த ராசா உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் நாயகனாக கொண்டாடப்பட்டார். கடைசியாக 2012 ஆம் ஆண்டு மேதை என்ற படத்தில் நடித்த அவர் அதன்பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். ஆனாலும் அவர் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 


 


                                           


இந்த நிலையில் அவர் மீண்டும் கதாநாயகனாக களமிறங்கி உள்ளார். சாமானியன் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை ட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ளார். ராஹேஷ் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் இப்படத்தில் நடிகர்கள் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த 3 சாமானியர்களும்  சமூகத்துக்கு என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது.