நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது. 


தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் எழுதி இயக்கி, நடித்து தயாரித்த படம் இரவின் நிழல். இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்த நிலையில் உலகிலேயே முதல் “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படம் என்ற அடையாளத்துடன்  கடந்த ஜூலை 15 ஆம் தேதி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 






இந்த படத்தை ரஜினிகாந்த் உட்பட திரைப்பிரபலங்கள் பாராட்டிய நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் - பார்த்திபன் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி கருத்து தெரிவிக்க, ஒரு கட்டத்தில் பார்த்திபன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் உருவப்பொம்மையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஒருபுறமிக்க மறுபுறம் இரவின் நிழல் படம் பல திரைப்பட விழாக்களிலும் விருதுகளை குவித்து வருகிறது. பார்த்திபனும், படக்குழுவினரும் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்து உரையாடினர். படம் தொடங்கியதில் இருந்து வெளியானது வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை பார்த்திபன் எதிர்க்கொண்டார். 


ஆனாலும் தன் முயற்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரத்தால் அந்த பிரச்சனைகள் எல்லாம் காணாமல் போனது என்றே சொல்லலாம். இரவின் படம் வெளியாகி கிட்டதட்ட 3 மாதங்களை கடந்து விட்ட நிலையில் இதுவரை இப்படம் ஓடிடியில் வெளியாகாமல் இருந்ததால் தியேட்டரில் வெளியாகி பார்க்க முடியாமல் போன ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். 






இப்படத்திற்கு பிறகு பார்த்திபன் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில் இரவின் நிழல் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து பார்த்திபன் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’ வந்தே விடும் ! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் … இருக்கிறோம். பார்ப்போம்! நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி!!! என தெரிவித்துள்ளார்.