தான் இயக்கிய படத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதையை நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்ததை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வதில் நடிகர் பார்த்திபனை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என சொல்லலாம். கதை தொடங்கி காட்சிகள் வரை எல்லாவற்றிலும் ஏதாவது செய்து பார்க்கலாமா என மெனக்கெடுவார். இப்படிப்பட்ட பார்த்திபன் கடந்த 2014 ஆம் ஆண்டு ”கதை திரைக்கதை வசனம் இயக்கம்” என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், அகிலா கிஷோர், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்துக்கு விஜய் ஆண்டனி, எஸ்.எஸ்.தமன், ஷரத், அல்போன்ஸ் பிரதாப் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.
இந்த படம் வித்தியாசமான கிளைமேக்ஸ் காட்சியால் பாராட்டைப் பெற்றது. முடிவை ஆடியன்ஸிடம் விட்ட பார்த்திபனுக்கு இப்படம் ஆரம்பத்தில் சோதனையை கொடுத்தாக அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதாவது, “கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தை எடுத்து விட்டு அதனை போட்டு காட்டினேன். தயாரிப்பு தரப்பில் இருந்து 20க்கும் மேற்பட்டவர்கள் பார்க்க வந்த நிலையில் யாருக்கும் படம் சுத்தமாக பிடிக்கவில்லை.
படம் முடிந்து வெளியே வந்த பிறகு என்னை ரொம்ப கஷ்டப்படுத்தக்கூடாது என்பதற்காக “பரவால்ல சார். நாம இன்னொரு படம் எடுத்துக்கலாம்” என சொல்லிட்டு சென்றார்கள். அதாவது நன்றாக இல்லை என நாசுக்காக சொல்லி விட்டார்கள். அன்றைக்கு தான் என்னோட பிபி லெவல் என்ன என்பது புரிந்தது. மெதுவா அது ஆரம்பிச்சதும் நேராக ராமச்சந்திராவில் போய் அட்மிட் ஆனேன். 20 பேரும் நல்லா இல்லைன்னு சொன்ன இந்த படம் என்ன ஆகுறது. என்னை நம்பி வேறு பணம் போட்டு விட்டார்கள்.
பின்னர் நான் தயாரிப்பு தரப்பிடம் போன் பண்ணி, ‘சார் இந்த முறை நீங்கள் வயதானவர்களை படம் பார்க்க அழைத்து வந்தீர்கள். அடுத்தமுறை படம் போடும்போது இளம் வயதினரை கூட்டி வாருங்கள்’ என சொன்னேன். மீண்டும் அந்த படம் திரையிட்ட போது இளம் வயதினர் படத்தின் காட்சிகளைப் பார்த்து விசில் அடித்தார்கள். அவர் என்னிடம் படத்தை மீண்டும் எடிட் செய்து விட்டீர்களா என கேட்டார். அப்படியே தான் இருக்கிறது என நான் பதில் சொன்னேன்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படம் வெளியானது. ரிலீஸ் ஆகுற அன்னைக்கு எனக்கு காய்ச்சல் வந்து விட்டது. டிக்கெட் கையில் இருக்கு, தியேட்டர் போக பயமா இருந்துச்சு. இந்த படமும் தோற்று போய் விட்டால் என்ன செய்வது என தெரியாமல் இருந்தேன். முதல் காட்சி முடிந்ததும் என்னுடைய உதவியாளர்கள் வந்து கடைசி காட்சி முடிந்ததும் கைதட்டியதாக சொன்னார்கள். முடிவே இல்லாத முடிவாக அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது” என ராதாகிருஷ்ணன் பார்த்திபன் கூறியிருப்பார்.