லவ் டுடே படத்தில் தன்னைப் பற்றி இடம்பெற்று இருக்கும் வசனம் பின்னணியில் என்ன உள்ளது என்பதை நேர்காணல் ஒன்றில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் விவரித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். கடைசியாக அவர் இயக்கத்தில், நடிப்பில் இரவின் நிழல் படம் வெளியாகியிருந்தது. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பல விருதுகளைப் பெற்றதோடு ரசிகர்களின் பாராட்டையும் குவித்தது. இதனைத் தொடர்ந்து “52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு” என்ற படத்தை பார்த்திபன் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் குறித்த வசனம்
இதனிடையே நேர்காணல் ஒன்றில் லவ் டுடே படத்தில் இடம் பெற்ற வசனம் பற்றியும், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பற்றியும் தெரிவித்துள்ளார். அதில், லவ் டுடே படத்தில் ஒரு டயலாக் வரும். பக்காவா பேசிட்டு இருந்த என்னை பார்த்திபன் மாதிரி பேச வச்சிட்டான்னு இருக்கும். நான் இந்த படத்தை பார்க்கும்போது சிரிச்சிட்டேன். அப்புறம் தான் எனக்கு தெரியும் பைத்தியம்ன்னு என்னைய சொல்ல வர்றாருன்னு தெரிய வந்துச்சு.
அதுக்கு என்ன காரணம் என்றால் கிருஷ்ணமூர்த்தின்னு என்னோட அசோசியேட் இயக்குநர் ஒருவர் கதை ஒன்று பண்ணியிருந்தார். கோமாளி படத்தின் கதையும், இதுவும் ஒன்று என பிரச்சினை உருவாகி இயக்குநர் பாக்யராஜ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்து அந்த படத்தின் கதை குறித்த நியாயத்தைப் பேசி, ரூ.10 லட்சத்தை நான் தான் வாங்கி கொடுத்தேன். பாக்யராஜூம் எனக்கு சாதகமான தீர்ப்பை வழங்கவில்லை. அவர் கதையின் மீதான நியாயத்தில் தீர்ப்பு வழங்கினார். லவ் டுடே படத்தில் என் பெயர் என் சம்பந்தமே இல்லாம வருதுன்னு நினைச்சேன். பிரதீப் கிட்ட வாய்ஸ் மெசெஜ் பண்ணி பேசினேன்.
ஆனால் பல மேடைகளில் லவ் டுடே படம் பற்றி தான் பேசுனேன். சில நேரங்களில் தேவையில்லாத கோபம், பழிவாங்கும் எண்ணம் எல்லாம் வரும்.ஆனால் நான் பிரதீப் வளர்ச்சியை நான் ரசிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
லவ் டுடேவின் வெற்றி
ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் “லவ் டுடே”. யுவன் இசையமைத்த இப்படம் கடந்தாண்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. கடந்தாண்டு தமிழ் சினிமாவில் அதிகமாக வசூல் செய்த படங்களின் லவ் டுடேவும் இடம் பெற்றது திரையுலகினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.