உஸ்தாஸ் பகத் சிங் பட நிகழ்ச்சியில் சாதி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் பார்த்திபன் தனது வருத்ததை மீண்டும் தெரிவித்துள்ளார். இனி மிக மிக ஜாக்கிரதையாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார். 

Continues below advertisement

கடந்த சில நாட்களுக்கு முன் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உஸ்தாத் பகத் சிங் பட நிகழ்ச்சி நடைபெற்றது. பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ள இப்படம் மார்ச் 19ல் வெளியாகிறது. இந்த படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்திருக்கிறார். இதனிடையே உஸ்தாத் பகத் சிங் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் தான் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவன் என அழுத்தமாக தெரிவித்தார். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்தது. 

இதனைத் தொடர்ந்து அதே நிகழ்ச்சியில் தான் தமிழ் சினிமாவுக்கு நன்றி சொன்ன வீடியோவை வெளியிட்டு பார்த்திபன் சமரசம் செய்ய முயன்றார். ஆனால் தமிழ்நாட்டில் புரட்சி பேசி விட்டு அண்டை மாநிலங்களுக்கு செல்லும்போது சாதி பெருமை பேசுகிறார் என பார்த்திபனை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து ஆடியோ ஒன்றை வெளியிட்டு என்னதான் தெலுங்கு தனது தாய்மொழி என்றாலும், தமிழுக்கு வாழ்க்கப்பட்டிருக்கிறேன் என கூறி பிரச்னையை முடிக்க முயன்றார். ஆனாலும் அவர் மீது தொடர்ச்சியாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்தது. 

Continues below advertisement

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மீண்டும் பதிவு ஒன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். அதில், “சத்தியமாக சொல்கிறேன். எந்த உள் நோக்கமும் இல்லாமல், எந்த லாப நோக்கும் இல்லாமல், வாய்ப்புக்காகவோ, வசதிக்காகவோ,  அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்?

ஏதோ வாய்த்தவறி ….இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன்.

இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க  விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது எனஉறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன் என ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.