Iran Mojtaba Khamenei US Israel war: அமெரிக்கா மற்றும் இஸ்ரேரை போரில் வீழ்த்தி மண்டியிட செய்ய வேண்டும் என மொஜ்தாபா வலியுறுத்தியுள்ளாராம்.
”அமெரிக்கா மண்டி போடனும்”
இஸ்ரேலையும், அமெரிக்காவையும் மண்டியிட செய்த பிறகே எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெற முடியும் என்று கூறி, இடைத்தரகர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை ஈரானின் புதிய உச்சபட்ச தலைவரான அயதுல்லா மொஜ்தபா கமேனி நிராகரித்துள்ளார் என, ஈரானின் மூத்த அதிகாரி தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தனது தந்தை அயதுல்லா அலி கமேனி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பதவியேற்ற மொஜ்தாபா நடத்திய முதல் வெளியுறவுக் கொள்கை கலந்துரையாடல்களின் போர் தொடர்பான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினாராம். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தணிவதற்கான அறிகுறிகள் ஏதுமின்றி மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், ரானின் நிலைப்பாடு மேலும் கடுமையாகியுள்ளது.
போரில் மொஜ்தாபா தீவிரம்
ராய்டர்ஸ் செய்தியின்படி, உச்ச தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு நடந்த தனது முதல் வெளியுறவுக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தின் போது, மொஜ்தபா கமேனி மிகவும் கடுமையான மற்றும் தீவிரமான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மொஜ்தாபா அந்தக் கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டாரா அல்லது ஆன்லைன் மூலமாக பங்கேற்றாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மேலும், அமெரிக்காவுடனான பதற்றங்களைக் குறைப்பதற்கு அல்லது போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கு இரண்டு இடைநிலை நாடுகள் ஈரானின் வெளியுறவு அமைச்சகத்திடம் முன்மொழிவுகளை அனுப்பியுள்ளனவாம். ஆனால், அந்த நாடுகள் அல்லது முன்மொழிவுகளின் உள்ளடக்கம் குறித்து எந்த விவரங்களும் வழங்கப்படவில்லை.
”இழப்பீடு வழங்க வேண்டும்”
சமாதானத்திற்கு இது சரியான நேரம் அல்ல என்றும், அமெரிக்காவும் இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட்டு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்ட பின்னரே பேச்சுவார்த்தைகள் தொடங்க முடியும் என்றும் ஈரானின் உச்ச தலைவர் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. ஈரானின் அரசியல் அமைப்பின் கீழ், வெளியுறவுக் கொள்கை மற்றும் ராணுவ முடிவுகள் உட்பட அனைத்து அரசு விவகாரங்களிலும் உச்ச தலைவருக்கே இறுதி அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது வாரத்தில் நுழையும் போர்
ஒரு வாரத்திற்கு முன்பு, தனது தந்தையின் பதவிக்கு மதகுருமார்கள் சபையால் மொஜ்தாபா கமெனி தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவரது புதிய புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அயதுல்லா கமேனி கொல்லப்பட்ட தாக்குதல்களில் அவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், காயங்கள் மிகவும் தீவிரமானவை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மேற்கத்திய நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான மோதல் தற்போது மூன்றாவது வாரத்தில் உள்ளது.இந்த போடில் இதுவரை குறைந்தது 2,000 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி பெரும்பாலும் மூடப்பட்டிருப்பதால், உலகளாவிய கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன. அதே நேரத்தில், இந்த முக்கியப் பாதையை மீண்டும் திறக்க உதவுமாறு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கைகளை அமெரிக்காவின் பல நட்பு நாடுகள் நிராகரித்துள்ளன.
பதவியேற்ற பிறகு மொஜ்தாபா வெளியிட்ட முதல் அறிக்கையிலேயே, ஈரானின் எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட வேண்டும் என்று கூறினார். ராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான மத்திய கிழக்கு நட்பு நாடுகளின் முயற்சிகளை அமெரிக்கா நிராகரித்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது. ஈரானின் கடுமையான எதிர்நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலும் கடும் பொருளாதார சேதங்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
