சமூக அரசியல் ரீதியிலான தனது கருத்துக்களை எப்போதும் துணிச்சலாகவும் அதே நேரத்தில் காமெடியாகவும் வெளிப்படுத்தி வருபவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இந்த முறை தமிழ் சினிமா வரலாற்றில் சாதி ரீதியிலான படங்கள் குறித்து அவர் சொன்ன கருத்து இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


ஆர்.ஜே. பாலாஜி


ஆர்.ஜே வாக பிரபலமாகி நடிகராக அறிமுகமானவர் பாலாஜி. முதலில் காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்தவர் பின் எல்.கே.ஜி படத்தில் கதாநாயகராக அறிமுகமானார்.  நடிகராக மட்டுமில்லாமல் கிரிக்கெட் வர்ணனையாளராக , இயக்குநராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். அண்மையில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாலாஜி இளம் வயதினர் கேட்கும் கேள்விகளுக்கு தனது அனுபவங்களில் இருந்து பதில் கொடுத்தார்.


தமிழ் சினிமாவில் ஜனநாயகம்


இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமா முந்தைய காலத்திற்கு இப்போதைய காலத்திற்கும் எப்படி மாற்றமடைந்திருக்கிறது என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு மிக நிதானமாக பதிலளித்த ஆர்.ஜே பாலாஜி “ஒவ்வொரு காலத்திற்கும் சினிமா மாற்றமடைந்து தான் வருகிறது. அது காலத்தின் தேவை என்று நான் நினைக்கிறேன். முந்தைய காலத்திற்கும் இப்போதைய காலத்திற்கும் சினிமா அதிகம் ஜனநாயகமாகி இருக்கிறது என்று சொல்லலாம். ஒருவர் நடிகராகவோ இயக்குநராகவோ ஆக வேண்டும் என்றால் அதற்காக ஒரு தனி நபரை சார்ந்து நாம் காத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் ஏதுமில்லை. உதாரணத்திற்கு லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குநர்களை சொல்லலாம். அதே போல் ஒருவர் நடிகராக வேண்டும் என்றால் என்னைப்போன்ற எந்த வித சினிமா பின்புலம் இல்லாத ஒருவர் தனது திறமையால் நடிகனாகி விடலாம். இது ஒரு மிகப்பெரிய நகர்வு.” என்றார்.


சாதியத்தின் மறுபக்கத்தை இப்போதுதான் பார்க்கிறோம்


சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தின் காட்சியைப் பார்த்தேன்.  அதில்  நடிகர் விஜயகுமார் நாற்காலியில் உட்கார்ந்திருக்க அவருக்கு சவரம் செய்ய வந்திருப்பார் கவுண்டமனி. விஜய்குமார் சில்வர் டம்ளரில் டீ குடிக்க கவுண்டமனிக்கு கொட்டங்குச்சியில் டீ கொடுக்கப்படும். இந்த மாதிரி நாட்டாமை, சின்ன கவுண்டர், குங்கும பொட்டு கவுண்டர், தேவர் மகன் என சாதியத்தை உயர்த்திப் பிடிக்கும் எத்தனையோ படங்களை நாம் பார்த்திருக்கிறோம்.


இந்தப் படங்களில் எத்தனை தவறான கருத்துக்களை நாம் பார்த்து கடந்து போய்விட்டிருக்கிறோம். இந்த கருத்துக்கள் எல்லாம் எவ்வளவு தவறானவை என்று நாம் இப்போது பார்க்கிறோம்.


”ரஞ்சித் , மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களின் படங்கள் வழியாக அவர்களின் வாழ்க்கையைப் பற்றி நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. சினிமாவில் மிக குறிப்பிடத்தகுந்த மாற்றமாக நான் இதைப் பார்க்கிறேன்“ என்று அவர் கூறியுள்ளார்.