கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று!


அப்பு முதல் பவர்ஸ்டார் வரை..




இந்திய சினிமாவின் லெஜண்டரி நடிகராக என்றென்றும் கொண்டாடப்படும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார். ‘அப்பு’ என சிறு வயது முதல் கன்னட சினிமா ரசிகர்களால் வாஞ்சையாக அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வந்த புனித் ராஜ்குமார், குழந்தை நட்சத்திரமாக கன்னட சினிமாவில் அறிமுகமானார்.


சென்னையில் பிறந்த புனித் ராஜ்குமார் மிக நன்றாக தமிழ் பேசக்கூடியவர். பெத்தாடு ஹூவு எனும் படத்துக்காக குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே தேசிய விருது வென்ற புனித், 4 கர்நாடக மாநில அரசின் விருதுகளையும் வென்றுள்ளார்.


பன்முகக் கலைஞர்


நடிகர், பாடகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர், டான்சர் என பன்முகக் கலைஞராக வலம் வந்த புனித்தின் மிலனா, ராஜகுமாரா, பிரித்வி, அரசு ஆகியவை பிரபல திரைப்படங்களாகும்.




இவரது மனைவி பெயர் அஸ்வினி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. கன்னட சினிமாவில் ஒரு கட்டத்தில் தன் தந்தையைப் போலவே உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துக் கொண்டிருந்த புனித் பவர் ஸ்டார் பட்டம் பெற்று மாஸ் நாயகனாக வலம் வரத் தொடங்கினார். 


பேரதிர்ச்சி தந்த மரணம்


பிரபல நடிகர், கன்னட மக்களின் செல்ல நாயகன், அன்பான அப்பா என வலம் வந்த புனித்,  யாரும் எதிர்பாராதவிதமாக கடந்த 2021ஆம் ஆண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார்.


தொடர்ந்து பெங்களூருவில் தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். தகவல் கேட்டு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் எண்ணற்ற ரசிகர்கள் கண்ணீர்மல்க குவிந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராதவகையில் சிகிச்சைப் பலனின்றி புனித் உயிரிழந்தார். கன்னட மக்கள்,  சினிமா ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய புனித்தின் மறைவு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.


‘கடவுளின் குழந்தை’


பிரதமர் மோடி முதல் அரசியல் தலைவர்கள், உச்ச நட்சத்திரங்கள் என அனைவரும் புனித்தின் மறைவுக்கு வருந்தி இரங்கல் தெரிவித்தனர். உயிருடன் இருக்கும்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்விச்சேவை, சமூக சேவைகள் என தொடர்ந்து பொதுச் சேவைகள் செய்து வந்த புனித் இறந்தபிறகு அவரது தானம் செய்யப்பட்ட கண்களால் 4 நபர்கள் ஒளி பெற்றனர்.


புனித் மறைந்தபோது தான் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தான் பார்த்து வளர்ந்த தனது அன்புக்குரிய புனித்தின் மறைவு பற்றி கேள்விப்பட்டும் பேரதிர்ச்சியும் மிகப்பெரும் வேதனையும் அடைந்தார். “என் கண் முன்னால் வளர்ந்த குழந்தை, திறமையும் அன்பும் பண்பும் கொண்ட குழந்தை” என ரஜினி மனம் வெதும்பி அப்போது பதிவிட்டிருந்தார்.




மேலும், சென்ற ஆண்டு புனித்துக்கு கர்நாடக மாநில அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் “அப்பு கடவுளின் குழந்தை; நம்முடன் சில நாள்கள் தங்கி விளையாடி தன் திறமையை வெளிப்படுத்தி விட்டு மீண்டும் கடவுளிடம் சென்று விட்டது” என மனம் வருந்திப் பேசினார்.


கன்னட சினிமா ரசிகர்கள் தாண்டி, ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களாலும் இறப்புக்குக்குப் பின் அதிகம் தேடப்பட்டு, பேசப்பட்டார். நடிகர் என்பதைத் தாண்டி மனிதராக ரசிகர்களின் இதயங்களை வென்றார். புனித் என்றென்றும் கடவுளின் குழந்தையாக ரசிகர்களால் கொண்டாடப்படுவார்!