நடிகர் புகழ் தற்போது Mr.Zoo Keeper படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில் ,இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் புகழ். இந்நிகழ்ச்சிகளின் வாயிலாக ரசிகர்களை பெற்ற புகழ், தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். தற்போது குக் வித் கோமாளியின் 4வது சீசனில் கோமாளியாக கலக்கி வரும் புகழின் பர்பார்மென்ஸ் வழக்கம் போல ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது.
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்ற போதே இவருக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் காமெடி கேரக்டர்களிலும் ஹீரோவின் நண்பனாகவும் புகழ் நடித்திருந்தார். இந்த படங்களில் இவரின் நடிப்பு பெரிதாக கவனிக்கப்படாத நிலையில், 1947 படத்தில் நடித்த புகழின் நடிப்பு ஏராளமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த புகழ், தற்போது நாயகனாகவும் களமிறங்கி உள்ளார்.
சமீபத்தில் காமெடி நடிகர்களான சூரி விடுதலை படத்திலும், வடிவேலு மாமன்னன் திரைப்படத்திலும் டைட்டில் ரோலிலில் மிக சிறப்பாக நடித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நிலையில், காமெடியன்கள் ஹீரோவாக நடிப்பது வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் புகழ், நடிக்கத் துவங்கிய சில காலத்திலேயே தற்போது ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த விஷயத்தை முதன்முதலில் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்தான் அறிவித்திருந்தார். இந்நிலையில் (Mr. Zoo Keeper) மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருவதால் நிச்சயம் இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் டிக்கிலோனா படத்தின் நாயகி ஷிரின் கஞ்சாவாலா புகழுக்கு ஜோடியாக நடிக்கின்றார்.
மாதவன், சினேகா நடிப்பில் வெளியான என்னவளே படத்தை இயக்கிய சுரேஷ், இந்தப் படத்தை இயக்கிவருகிறார். ஊட்டி, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் போஸ்டரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகழ், தன்னுடைய கனவை இந்தப் படம் நனவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்முறையாக திரையில் நாயகனாக நடித்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள புகழ், நிஜப் புலியுடன் தான் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்தின் வாய்ப்பை அளித்த இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் யுவன் மற்றும் தொடர்ந்து ஆதரவளித்துவரும் ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். புகழ் நிஜப்புலியுடன் நடிக்கும்போது ஒரு காட்சியில் அந்த புலியின், செயலைப்பார்த்து தானே பயந்துவிட்டதாக புகழ் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.இதற்கு முன்னதாக நடிகர் எம்.ஜி.ஆர் 1955ஆம் ஆண்டு வெளியான குலேபகாவலி படத்தில் நிஜப் புலியுடன் சண்டை காட்சியில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.