பிரபல நடிகர் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் பணமோசடி புகார் ஒன்றை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 






பிரபல இயக்குநரும், நடிகருமான தியாகராஜனின் மகனான நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஒரு காலக்கட்டத்தில் இருந்தார். காலப்போக்கில் அவரது படங்கள் தொடர் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடிக்க தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் இந்தியில் வெற்றி பெற்று தமிழில் ரீமேக் ஆகியுள்ள அந்தகன் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தியாகராஜன் இயக்கியுள்ள சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணின் அந்தகன் படத்திற்கு இசையமைத்துள்ளார். 


இந்நிலையில் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் பணமோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வரும் குமுதினி என்ற பெண் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வாய்மொழி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னிடம் ரூபாய் 10 லட்சம்   பண மோசடி செய்திருப்பதாகவும், அந்த பணத்தை திரும்ப பெற்றுத்தருமாறும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 






இதனைத் தொடர்ந்து  நடிகர் தியாகராஜனின் உதவியாளர் ஆனந்த் என்பவர் குமுதினி மீது பொய்யான புகார் அளித்திருப்பதாகவும், அவர் 3 முறை வீட்டுக்கு வந்து பிரச்சனையில் ஈடுபட்டதாகவும்  கூறி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.