தமிழ் சினிமா ஏராளமான வாரிசு நடிகர்களை பார்த்து இருந்தாலும் சினிமாவிற்கு தேவையான டான்ஸ், ஜிம்னாஸ்டிக், ஹார்ஸ் ரைடிங், கராத்தே என அனைத்து வித்தைகளையும் முறையே கற்று தேர்ந்து நிரம்பிய குடமாக களம் இறங்கியவர் நடிகர் பிரஷாந்த். இன்றைய தமிழ் சினிமா கொண்டாடும் தல, தளபதி அனைவருமே அன்று டாப் ஸ்டார் பிரஷாந்திற்கு அடுத்த இடங்களில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு மார்க்கெட்டை தக்க வைத்தவர். அரும்பு மீசை இளைஞனாக 1990ம் ஆண்டில் வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். படத்தின் இயக்குனர் ராதா பாரதி, ஹீரோயின் காவேரி என அனைவருக்குமே முதல் படம் என்றாலும் படம் இன்ஸ்டன்ட் ஹிட் அடித்தது. அப்படத்தின் பாடல்கள் அனைத்துமே எவர்கிரீன் பாடல்கள். 'தண்ணி குடம் எடுத்து...' பாடல் ஈவ் டீசிங் செய்ய பயன்படுத்தப்பட்ட பக்காவான பாடல் எனலாம். முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த ஹீரோவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஜெட் வேகத்தில் பிரஷாந்த் மார்க்கெட் எங்கோ சென்றது. ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி திரைப்படம் நடிகர் பிரஷாந்துக்கு ஒரு ஸ்டார் நடிகர் என்ற அந்தஸ்தை கொடுத்தது.



உலக அழகியின் முதல் ஹீரோ :



தமிழ் சினிமாவில் டாப் இயக்குநர்களான பாலுமகேந்திரா, மணிரத்னம்,  ஷங்கர் என திரை ஜாம்பவான்களின் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்து நடித்த ஒரே நடிகர் பிரஷாந்த் தான். இயக்குநர்கள் மட்டுமின்றி 90களில் தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோயின்களுடனும் டூயட் பாடிய ஒரு ஸ்டார் ஹீரோ. எந்த ஹீரோயினுடன் பிரஷாந்த் நடித்தாலும் கெமிஸ்ட்ரி சும்மா கன்னாபின்னாவென ஒர்க் ஆகும்.
ஷங்கர் இயக்கம், உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஹீரோயின், ஏ.ஆர். ரஹ்மான் இசை மட்டுமின்றி அந்த காலத்திலேயே நம்பமுடியாத அளவுக்கு அசர வைத்த கிராபிக்ஸ் காட்சிகள், உலக அதிசயங்கள் என ஒரே படம் நடிகர் பிரஷாந்துக்கு ஜாக்பாட் படமாக அமைந்தது 'ஜீன்ஸ்' திரைப்படம். அவரின் திரை வாழ்க்கையிலும் ஒரு மைல் கல்லாக அமைந்த படம் எனலாம். திருடா திருடா, வின்னர், ஜோடி, செம்பருத்தி, அப்பு, மஜ்னு, பார்த்தேன் ரசித்தேன், கண்ணெதிரே தோன்றினாள் என வரிசையாக ஹிட் படங்களில் நடித்து தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நடிகர் பிரஷாந்த்.


 



தி ரியல் ஆணழகன் :

'ஆணழகன்' என்ற படத்தில் நடித்ததால் மட்டுமில்லை உண்மையிலேயே ஆணழகன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் நடிகர் பிரஷாந்த். அரவிந்சாமி, அஜித், அப்பாஸ் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் இருந்த ‘சாக்லேட் பாய்ஸ்' பட்டியலில் நடிகர் பிரஷாந்தும் இடம்பெற்று இருந்தாலும் இவருக்கென ஒரு தனி ஸ்டைல் இருந்தது. மாடர்ன் லுக் மட்டுமே கொண்டே ‘சாக்லேட் பாய்’ என இல்லாமல் ஆக்ஷன் படங்கள், கிராமிய படங்கள் என அனைத்து ஸ்டைல் படங்களுக்குமே பக்காவாக பொருந்த கூடியவர். ஆக்ஷன், காதல் காட்சிகள் மட்டுமல்ல நகைச்சுவையிலும் பிச்சு உதற முடியும் என நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 'வின்னர்' படத்தில் அவர் செய்த லூட்டிகள் இன்றும் பிரபலம். இப்படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு திரை விருந்தாக அமைந்தது.


 


வெளிநாடு வாழ் தமிழ் ரசிகர்கள் :


சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளில் ஏராளமான ஸ்டார் நைட் கலை நிகழ்சிகளை நடத்தியுள்ளார். தமிழகத்தை போலவே அவருக்கு அங்கும் கூட்டம் அலைமோதியது. அதற்கு காரணம் அவருக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழ் ரசிகர்கள் ஏராளம். இன்றும் 90ஸ் கிட்ஸ் பலரின் ஃபேவரட் ஹீரோ யார் என்று கேட்டால் பிரஷாந்த் என சொல்வார்கள். அந்த அளவிற்கு அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட ரசிகர் பட்டாளத்தை இன்றளவும் தக்க வைத்துள்ளார்.


ஸ்லீப்பர் செல் ரசிகர்கள் :


90களின் ஆரம்ப காலகட்டத்தில் ஜெட் வேகத்தில் வளர்ச்சியை எட்டிய நடிகர் பிரஷாந்த் 2000ம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்த தோல்வி படங்களால் பின்னடைவை சந்தித்தார். இருப்பினும் ஒரு பீனிக்ஸ் பறவை போல தன்னை நிரூபிக்க முயற்சிகளை எடுத்து கொண்டு தான் இருக்கிறார். இந்தியில் வெற்றி படமாக அமைந்த 'அந்தாதூன்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'அந்தகன்' படத்தில் நடித்துள்ளார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அப்படம் வெளியாகாமல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் அவரின் ரசிகர்கள் இப்படத்தின் ரிலீசுக்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளான இன்றுடன் அவரின் வாழ்க்கையில் இருந்த முட்டுக்கட்டைகள் அனைத்தும் விலகி ஒரு பிரகாசமான ஆண்டாக இனி வரும் காலங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என மனதார வாழ்த்துவோம்.

ஹேப்பி பர்த்டே டாப் ஸ்டார் !